ரூ.10 லட்சம் மதிப்பிலான மான் கொம்பு பறிமுதல்; 3 பேர் கைது
ரூ.10 லட்சம் மதிப்பிலான மான் கொம்பு பறிமுதல்; 3 பேர் கைது
ADDED : மே 13, 2026 03:02 AM

சிக்கபானவரா: பெங்களூரில் விற்பனை செய்ய முயன்ற, பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான, மான் கொம்பு பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
பெங்களூரு சிக்கபானவரா பகுதியில் மான் கொம்பை விற்பனை செய்ய மூன்று பேர் காத்து இருப்பதாக, சி.சி.பி., எனும் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற போலீசார், சந்தேகம்படும்படியாக சுற்றித்திரிந்த மூன்று பேரை பிடித்தனர்.
கையில் வைத்திருந்த சாக்கு பையை திறந்து பார்த்த போது, அரிய வகை மான் கொம்பு இருந்தது. பறிமுதல் செய்யப்பட்ட அதன் மதிப்பு 10 லட்சம் ரூபாய். மான் கொம்பை விற்க முயன்ற, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில் அவர்கள், மூடலபாளையா சஞ்சீவினி நகரை சேர்ந்த முரளி, 29, மாரேனஹள்ளியை சேர்ந்த மஞ்சுநாத், 39, சிக்கசந்திராவை சேர்ந்த கரியப்பா, 53 என்பது தெரிந்தது.
தங்களுக்கு தெரிந்த ஒருவர் கொடுத்த மான் கொம்பை விற்று அதில் கிடைக்கும் பணத்தை பங்கு போட்டு கொள்ள அவர்கள் திட்டமிட்டதாக போலீசில் தெரிவித்தனர்.
