/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பீஹார் தோல்வியால் துணை முதல்வர் சிவகுமார்... ஏமாற்றம்! கர்நாடகாவில் முதல்வர் மாற்றத்துக்கு வாய்ப்பில்லை
/
பீஹார் தோல்வியால் துணை முதல்வர் சிவகுமார்... ஏமாற்றம்! கர்நாடகாவில் முதல்வர் மாற்றத்துக்கு வாய்ப்பில்லை
பீஹார் தோல்வியால் துணை முதல்வர் சிவகுமார்... ஏமாற்றம்! கர்நாடகாவில் முதல்வர் மாற்றத்துக்கு வாய்ப்பில்லை
பீஹார் தோல்வியால் துணை முதல்வர் சிவகுமார்... ஏமாற்றம்! கர்நாடகாவில் முதல்வர் மாற்றத்துக்கு வாய்ப்பில்லை
ADDED : நவ 15, 2025 08:00 AM

சமீப நாட்களாக, கர்நாடக மக்களின் காதுகளில் விழும் வார்த்தை, 'நவம்பர் புரட்சி' என்பது தான். காங்கிரஸ் அரசின், சில அமைச்சர்கள் மற்றும் பா.ஜ., தலைவர்கள் இதே வார்த்தையை அடிக்கடி கூறி வந்தனர்.
'இம்மாதம் 20ம் தேதியுடன், காங்கிரஸ் அரசு பொறுப்பேற்று இரண்டரை ஆண்டு நிறைவடைகிறது. ஏற்கனவே மேலிட அளவில் செய்து கொண்டதாக கூறப்படும், அதிகார பகிர்வு ஒப்பந்தப்படி, சித்தராமையா இரண்டரை ஆண்டு முதல்வராக இருந்துள்ளார். அடுத்த இரண்டரை ஆண்டுக்கு, முதல்வர் பதவியை துணை முதல்வர் சிவகுமாருக்கு விட்டுத்தர வேண்டும்.
'ஆனால், சித்தராமையா முதல்வர் பதவியை விட்டுத்தர சம்மதிக்க மாட்டார். அவரது அமைச்சர்களும் பதவி விலக மறுக்கலாம். இதனால் நவம்பரில் அரசியல் புரட்சி ஏற்படும்' என, சில அமைச்சர்களும், காங்., - எம்.எல்.ஏ.,க்களும் கூறி வந்தனர்.
'நவம்பரில் முதல்வர் மாற்றம் நிகழும்; தனக்கு வாய்ப்பு கிடைக்கும்' என, சிவகுமாரும் ஆவலோடு காத்திருந்தார். முதல்வர் பதவிக்காக கோவில், கோவிலாக வலம் வந்தார். ஹாசனாம்பா கோவிலுக்கும் சென்று, சக்தி வாய்ந்த ஸ்லோகங்களை பாராயணம் செய்தார்.
அவரது ஆதரவாளர்களும், 'சிவகுமார் முதல்வராவார்' என, நம்பியிருந்தனர். முதல்வர் மாற்றம் குறித்து, மேலிடத்துக்கு நெருக்கடி கொடுக்க டில்லிக்கு செல்ல தயார் நிலையில் உள்ளனர். ஆனால் மேலிட தலைவர்கள், பீஹார் தேர்தலில் கவனமாக இருந்ததால், 'யாரும் டில்லிக்கு வராதீர்கள்' என, உத்தரவிட்டது.
இந்த சூழலில், அனைவரும் எதிர்பார்த்த பீஹார் சட்டசபை தேர்தல் முடிவு நேற்று வெளியானது. தேர்தலில், காங்கிரஸ் பலத்த பின்னடைவை சந்தித்துள்ளது. இது, அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
ராகுலின் செல்வாக்கு, பீஹார் தேர்தலில், காங்கிரசுக்கு வெற்றியை தேடித்தரும் என, சிவகுமார் உட்பட பலரும் எதிர்பார்த்தனர். ஓட்டுத் திருட்டு குற்றஞ்சாட்டி ராகுல் நடத்திய போராட்டத்துக்கு பலன் கிடைக்கவில்லை.
பீஹாரில் அவர் நடத்திய யாத்திரை, செய்த பிரசாரம், பொதுக்கூட்டங்களில் ஆற்றிய உரைகளுக்கு பீஹார் வாக்காளர்கள் முக்கியத்துவம் தரவில்லை.
'பீஹாரில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தால், மேலிடம் தெம்பாகி இருக்கும். கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் விவகாரத்தில், யாருடைய நெருக்கடிக்கும் பணியாமல் முடிவு எடுத்திருக்கும். இதை பயன்படுத்தி, முதல்வர் பதவியில் சிவகுமாரை அமர்த்தலாம்' என, அவரது ஆதரவாளர்கள் நினைத்திருந்தனர். ஆனால், இப்போது அப்படி செய்ய முடியாது. பீஹார் தோல்வி காங்கிரஸ் மேலிடத்தை பலவீனமாக்கியுள்ளது. கர்நாடகாவில் திடமான முடிவு எடுத்து, முதல்வரை மாற்றும் சூழ்நிலையில் மேலிடம் இல்லை.
தற்போது, அரசியல் ரீதியில் சித்தராமையாவின் கையே ஓங்கியுள்ளது. முதல்வர் மாற்றத்துக்கும் வாய்ப்பு இல்லை. அமைச்சரவை மாற்றி அமைப்பது உட்பட அனைத்து முடிவுகளிலும், இவரது கருத்துக்கு முன்னுரிமை கிடைக்கும்.
'எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இல்லை என்றாலும், மேலிடத்தின் பக்கபலம் எனக்கு உள்ளது. நல்ல முடிவை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது' என கூறி வந்த சிவகுமாருக்கு, பீஹார் தேர்தல் முடிவு பலத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. அவரது முதல்வாகும் கனவும் தகர்ந்துள்ளது.

