/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
செயற்குழு கூட்டத்துக்கு அழைப்பில்லை துணை முதல்வர் சிவகுமார் வருத்தம்
/
செயற்குழு கூட்டத்துக்கு அழைப்பில்லை துணை முதல்வர் சிவகுமார் வருத்தம்
செயற்குழு கூட்டத்துக்கு அழைப்பில்லை துணை முதல்வர் சிவகுமார் வருத்தம்
செயற்குழு கூட்டத்துக்கு அழைப்பில்லை துணை முதல்வர் சிவகுமார் வருத்தம்
ADDED : டிச 26, 2025 06:48 AM

பெங்களூரு: முதல்வர் சித்தராமையா இன்று டில்லி செல்கிறார். அங்கு நடக்கும் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். இந்த கூட்டத்துக்கு, துணை முதல்வர் சிவகுமாருக்கு அழைப்பு இல்லாதது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம், டில்லி இந்திரா பவனில் நாளை நடைபெற உள்ளது. கூட்டத்தில் பங்கேற்கும்படி, காங்கிரஸ் ஆட்சியில் உள்ள கர்நாடகாவின் சித்தராமையா, தெலுங்கானாவின் ரேவந்த் ரெட்டி, ஹிமாச்சல பிரதேசத்தின் சுக்வீந்தர் சிங் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக முதல்வர் சித்தராமையா, இன்று டில்லி செல்கிறார். கர்நாடகாவை சேர்ந்த காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்களான ஹரிபிரசாத், நாசிர் ஹுசேன், வீரப்ப மொய்லி ஆகியோரும், செயற்குழுவில் கலந்து கொள்ள டில்லி செல்கின்றனர். ஐந்து மாநிலங்களில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தல், ஓட்டுத்திருட்டு, நேஷனல் ஹெரால்டு வழக்கு உட்பட, பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து செயற்குழுவில் ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
துணை முதல்வர் சிவகுமாருக்கு, செயற்குழு கூட்டத்துக்கு அழைப்பு இல்லை. ஏற்கனவே முதல்வர் பதவிக்காக, சித்தராமையா, சிவகுமார் இடையே நடைபெறும் பனிப்போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கட்சியில் கோஷ்டி பூசல் அதிகரிக்கவும், இந்த விவகாரம் காரணமாகியுள்ளது. லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலை சந்திக்க, சில நாட்களுக்கு முன், சிவகுமார் டில்லிக்கு சென்றிருந்தார். ஆனால், அவரை சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார்.
இந்நிலையில், டில்லியில் நடக்கவுள்ள செயற்குழு கூட்டத்துக்கு, மாநில காங்கிரஸ் தலைவரான சிவகுமாருக்கு அழைப்பு விடுக்கவில்லை. சித்தராமையாவுக்கு மட்டும் அழைப்பு வந்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே மல்லிகார்ஜுன கார்கேவை, துணை முதல்வர் சிவகுமார், பெங்களூரில் நேற்று சந்தித்து பேசினார். இருவரும் முக்கியமான விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். பின், சிவகுமார் அளித்த பேட்டி:
டில்லியில் நாளை காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடக்கவுள்ளது. கூட்டத்தில் பங்கேற்கும்படி எனக்கு அழைப்பு விடுக்கவில்லை. ஒருவேளை அழைப்பு வந்தால் செல்வேன். முதல்வர் சித்தராமையாவுக்கு அழைப்பு வந்துள்ளதாக தெரிகிறது. அவர் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க, டில்லிக்கு செல்கிறார்.
பதவி எதுவாக இருந்தாலும், நான் கட்சியின் தொண்டன். தொண்டனாக, மாநில தலைவராக கட்சியின் கொடியை கட்டியுள்ளேன். கட்சி போஸ்டர்களை ஒட்டியுள்ளேன். குப்பையை கூட்டி பெருக்கும் வேலையையும், நான் செய்துள்ளேன். காங்கிரசுக்காக நான் அனைத்தையும் செய்துள்ளேன். மேடை மீது அமர்ந்து உரையாற்ற, நான் வரவில்லை. கட்சிக்காக பணியாற்ற வந்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

