/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சுந்தரேஸ்வரர் பாடல்களில் மெய்சிலிர்க்கும் பக்தர்கள்
/
சுந்தரேஸ்வரர் பாடல்களில் மெய்சிலிர்க்கும் பக்தர்கள்
சுந்தரேஸ்வரர் பாடல்களில் மெய்சிலிர்க்கும் பக்தர்கள்
சுந்தரேஸ்வரர் பாடல்களில் மெய்சிலிர்க்கும் பக்தர்கள்
ADDED : நவ 25, 2025 05:51 AM

பெங்களூரு ரூரல் தேவனஹள்ளி பொம்மவாராவில் சுந்தரேஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவில் பழமையான ஆன்மிக தலம். இது, தேவனஹள்ளியின் ஆன்மிக உறுதி, தெய்வ நம்பிக்கையை பறைசாற்றுகிறது. 600 ஆண்டுகள் பழமையானது. மூலவராக சிவனின் அம்சமான சுந்தரேஸ்வரர், பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இந்த லிங்கத்தில் மனித முகம் போன்ற உருவமும் பொறிக்கப்பட்டு உள்ளது. இது வெள்ளி கவசத்தில் உள்ளது.
வரலாறு இந்த கவசமே தீய சக்திகளில் இருந்து பக்தர்களை பாதுகாக்கிறது என, பலரும் கருதுகின்றனர். இந்த கோவில் அமைந்துள்ள பகுதியில் ஒரு காலத்தில், ஒரு முனிவர் தவம் செய்தார். அவருக்கு சிவபெருமானின் அருள் கிட்டியது. இதனால், அப்பகுதியில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ததாகவும், நாளடைவில் கோவிலாக மாறியதாகவும் அப்பகுதியினர் கூறுகின்றனர்.
இந்த கோவிலின் கல்வெட்டுகளிலும் பல வரலாற்று குறிப்புகள் உள்ளன. புராணங்களை கூறும் வகையில் சிற்பங்கள் செதுக்கப்பட்டு உள்ளன. கோவிலின் மூலவர் சுந்தரேஸ்வரருக்கு அழகின் எஜமான், கருணையின் வடிவம், நளனின் ஆதாரம் என பல பெயர்கள் உண்டு.
இவர் குறித்து மனம் உருகி பக்தர்கள் பாடும் பக்தி பாடல்களை, நாள் முழுக்க கேட்டு கொண்டே இருக்கலாம். பார்வதி தேவியும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தென்னிந்திய கட்டட கலையில் கோவில் கட்டப்பட்டு உள்ளது. கணபதி, முருகர், நவக்கிரகங்களுக்கு தனித்தனி சன்னிதிகள் உள்ளன.
இங்கு மஹாசிவராத்திரி, கார்த்திகை தீபம் ஆகியவை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாக்களில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்பர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
கோவில் அமைந்துள்ள பகுதியில் மரங்கள் ஏராளம் உள்ளன. இங்கு வரும் பக்தர்கள், தியானம் செய்வதற்கு ஏற்ற இடமாகவும் வளாகம் உள்ளது. காலை 8:00 மணி முதல்- மதியம் 1:00 மணி வரையும், மாலை 5:00 மணி முதல்- இரவு 8:00 மணி வரையும் திறந்திருக்கும்
- நமது நிருபர் -:.

