/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தர்மஸ்தலா வழக்கு: நால்வர் 'டிமிக்கி'
/
தர்மஸ்தலா வழக்கு: நால்வர் 'டிமிக்கி'
ADDED : அக் 28, 2025 04:37 AM

மங்களூரு: தர்மஸ்தலா வழக்கில் சுஜாதா பட்டை தவிர, மற்ற நால்வரும் விசாரணைக்கு ஆஜராகாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில் பலாத்காரம் செய்து நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உடல்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படுவது பற்றி, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கிறது.
'வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி, தர்மஸ்தலாவின் உஜ்ரே கிராமத்தை சேர்ந்த ராஷ்ட்ரீய ஹிந்து ஜாக்ரன வேதிகே அமைப்பு தலைவர் மகேஷ் திம்மரோடி, சமூக ஆர்வலர்கள் கிரிஷ் மட்டன்னவர், ஜெயந்த், பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட கல்லுாரி மாணவி சவுஜன்யாவின் மாமா விட்டல் கவுடா, சுஜாதா பட் ஆகியோர் விசாரணைக்கு நேற்று ஆஜராக வேண்டும்; ஆஜராகவில்லையெனில் கைது செய்யப்படுவீர்கள்' என, சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
நேற்று பெங்களூரில் இருந்து பெல்தங்கடியில் உள்ள சிறப்பு விசாரணை குழுவின் அலுவலகத்திற்கு சுஜாதா பட் மட்டும் விசாரணைக்காக ஆஜரானார். மற்ற நான்கு பேரும் மதியம் 2:00 மணி வரை வரவில்லை. பின்னர், மகேஷ் திம்மரோடி சார்பாக அவரது வக்கீல் அம்பிகா பிரபு வந்தார்.
திம்மரோடியால் வர முடியாத சூழல் உள்ளது. இதனால், அவரால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை. எனவே, திம்மரோடி உட்பட நான்கு பேரும் விசாரணைக்கு ஆஜராக ஏழு நாட்கள் அவகாசம் அளிக்கும்படி வக்கீல் கோரினார்.
இதை ஏற்க மறுத்த அதிகாரிகள், நான்கு நாட்கள் மட்டும் அவகாசம் வழங்குவதாக தெரிவித்தனர்.

