/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சித்தராமையாவின் எம்.எல்.ஏ., பதவி ரத்து கோரிய மனு தள்ளுபடி; ஐகோர்ட் அதிரடி
/
சித்தராமையாவின் எம்.எல்.ஏ., பதவி ரத்து கோரிய மனு தள்ளுபடி; ஐகோர்ட் அதிரடி
சித்தராமையாவின் எம்.எல்.ஏ., பதவி ரத்து கோரிய மனு தள்ளுபடி; ஐகோர்ட் அதிரடி
சித்தராமையாவின் எம்.எல்.ஏ., பதவி ரத்து கோரிய மனு தள்ளுபடி; ஐகோர்ட் அதிரடி
UPDATED : ஏப் 23, 2025 09:12 AM
ADDED : ஏப் 23, 2025 07:13 AM

கர்நாடக முதல்வர் சித்தராமையா. இவர், மைசூரு மாவட்டம், வருணா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஆவார்.
இத்தொகுதியை சேர்ந்த சங்கர் என்ற வாக்காளர், 'ஐந்து வாக்குறுதி திட்டங்களை அளித்து, மக்களை ஏமாற்றி சித்தராமையா வெற்றி பெற்று உள்ளார். எனவே, அவரது எம்.எல்.ஏ., பதவியை ரத்து செய்ய வேண்டும்' என்று, உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். இந்த மனுவை நீதிபதி சுனில் தத் யாதவ் விசாரித்தார்.
அரசு வாக்குறுதி
சித்தராமையா சார்பில் ஆஜரான வக்கீல் ரவிவர்ம குமார் தனது வாதங்களின் போது கூறியதாவது:
மனுதாரர் தாக்கல் செய்த மனுவில், பிரதிவாதி மீது 11 குற்றச்சாட்டுகளை கூறி உள்ளார். அதில் முக்கிய குற்றச்சாட்டு தேர்தல் செலவு பற்றியது. தேர்தலில் வரம்பை மீறி செலவு செய்தது பற்றி தேர்தல் அதிகாரி, தேர்தல் ஆணையத்திடம் மனுதாரர் புகார் செய்யவில்லை. பிரதிவாதி முதல்வரான பின், அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. மனுதாரர், இந்த நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த பார்க்கிறார்.
தேர்தலுக்கு எவ்வளவு செலவு செய்தார் என்பது பற்றி, மனுவில் எந்த தகவலும் இல்லை. இது ஒரு வெறுப்பு குற்றச்சாட்டு. எம்.எல்.ஏ., ரிஸ்வான் அர்ஷத், அமைச்சர் பிரியங்க் கார்கே ஆகியோரின் தேர்தல் தகராறு விசாரணை தொடர்பான மனுக்களில் இருந்து, இந்த மனு நகல் எடுக்கப்பட்டு உள்ளது.
தேர்தல் தகராறு மனு, நகல் எடுக்க கூடியது இல்லை. அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ள அம்சங்கள் எதிர்காலத்தில் அமையும் அரசின் வாக்குறுதியாக மாறுகிறது. தனிநபர் வாக்குறுதி இல்லை. இதனால், எனது மனுதாரரர் வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றினார் என்று சொல்ல முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
6 ஆண்டு தடை
மனுதாரர் தரப்பு வக்கீல் பிரமிளா நேசர்கி வாதிட்டதாவது:
காங்கிரசின் ஐந்து வாக்குறுதிகளும் அடிப்படை உரிமைகள், அரசியலமைப்பு வழிகாட்டுதல் கொள்கைக்கு எதிரானவை. வாக்குறுதி திட்டங்கள் தொடர்பான அட்டையை, அகில இந்திய காங்கிரஸ் வெளியிடவில்லை. கர்நாடக காங்கிரஸ் வெளியிட்டு உள்ளது. அந்த அட்டையில் பிரதிவாதி சித்தராமையா கையெழுத்து போட்டு உள்ளார்.
இதன்மூலம் அவர் கவர்ச்சிகர அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை ஏமாற்றி உள்ளார். இலவசம் வழங்குவதாக உறுதி அளிப்பது ஊழல் செய்வதற்கு சமம். அவரது வெற்றியை செல்லாது என்று அறிவித்து, ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்.
14வது பிரிவு மீறல்
வரிகள் மூலம் திரட்டப்பட்ட நிதியை இலவச திட்டங்களுக்கு பயன்படுத்த முடியாது. அதற்கு அரசு அதிகாரம் இல்லை என்று நாங்கள் கூறவில்லை. ஆனால், நிதி மசோதாபடி சிறப்பு மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். இந்த வழக்கில் நிதி மசோதா நிறைவேற்றப்படவில்லை. இலவச திட்டங்கள் அரசியலமைப்புக்கு உகந்ததா என்பதை நீதிமன்றம் ஆராய வேண்டும்.
தேர்தல் அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டால், அதை கர்நாடக காங்கிரசால் உருவாக்க முடியுமா என்பது எங்கள் கேள்வி. பெண்களுக்கு மட்டும் இலவச பஸ் பயண சேவை வழங்கி விட்டு, ஆண்களுக்கு வழங்காதது அரசியலமைப்பின் 14வது பிரிவை மீறுவது ஆகும்.
தேவைப்படுபவர்களுக்கு மட்டும் வாக்குறுதி திட்டம் கொடுத்து இருக்கலாம். அனைவருக்கும் வழங்குவது சரியல்ல. வாக்குறுதி திட்டங்கள் மூலம் மக்களை தரம் தாழ்த்தி நடத்துகின்றனர்.
இவ்வாறு வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சஞ்சய் தத் யாதவ் நேற்று தீர்ப்பு கூறினார். முதல்வர் தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்டு, சங்கரின் மனுவை தள்ளுபடி செய்தார்.

