/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
விவாகரத்தான பெண்களிடம் திருமண ஆசை காட்டி மோசடி
/
விவாகரத்தான பெண்களிடம் திருமண ஆசை காட்டி மோசடி
ADDED : மே 09, 2025 11:39 PM

பெங்களூரு: டைவர்சி மேட்ரிமோனியல் வெப்சைட் மூலமாக, பெண்களிடம் அறிமுகம் செய்து, பணம் பறித்து மோசடி செய்தவர் போலீசாரிடம் சிக்கினார்.
பெங்களூரின் மஹாதேவபுராவில் வசிப்பவர் சுரேஷ் நாயுடு, 61. ஏற்கனவே இரண்டு திருமணங்களை செய்துள்ளார். இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.
மறுமணம் செய்து கொள்ள, டைவர்சி மேட்ரிமோனியல் வெப்சைட்டில் தன் பெயரை பதிவு செய்து கொண்டார்.
சிக்கபல்லாபூரை சேர்ந்த பெண்ணொருவர், மேட்ரிமோனியல் வெப்சைட்டில் சுரேஷ் நாயுடுவுக்கு அறிமுகமானார். இப்பெண்ணுக்கும் திருமண ஆசை காட்டி, 2.80 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டார்.
பெண்ணை திருமணம் செய்து கொள்ளவில்லை. பணத்தையும் திருப்பியும் தரவில்லை. பணத்தை திருப்பிக் கேட்டபோது மிரட்டல் விடுத்தார்.
அப்பெண், சிக்கபல்லபூர் சைபர் குற்றம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார், நேற்று முன்தினம் சுரேஷ்நாயுடுவை கைது செய்தனர்.
இவரிடம் விசாரித்தபோது, யஷ்வந்த்பூரில் ஒரு பெண், மலேஷியாவில் ஒரு பெண், சிக்கபல்லபூரில் ஒரு பெண் உட்பட, பல பெண்களை ஏமாற்றியது தெரிய வந்தது.
இவரது தந்தை காலமான பின், பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதை சமாளிக்க பல இடங்களில் கடன் வாங்கினார். கடனை அடைக்க வழி தெரியாமல், மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
விவாகரத்தான பெண்கள், கணவரை பிரிந்த பெண்களுக்கு, வாழ்வு தருவதாக நம்ப வைத்து, பணம் பெற்று மோசடி செய்தது தெரிந்தது.

