/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
விரைவில் ஹூப்பள்ளியில் டி.என்.ஏ., பரிசோதனை பிரிவு
/
விரைவில் ஹூப்பள்ளியில் டி.என்.ஏ., பரிசோதனை பிரிவு
ADDED : நவ 11, 2025 04:17 AM
பெங்களூரு: குற்ற வழக்குகளில், குற்றங்களை உறுதி செய்யவும், விபத்துகளில் இறந்தவர்களை அடையாளம் காண்பதிலும் முக்கிய பங்கு வகிக்கும் டி.என்.ஏ., எனும் மரபணு பரிசோதனை இனி ஹூப்பள்ளியிலும் செய்யப்படும்.
இதுகுறித்து, உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
குற்ற வழக்குகளில் தடயவியல் ஆய்வகம் அளிக்கும் டி.என்.ஏ., அறிக்கை, மிகவும் முக்கியமானது. குற்றங்களை நிரூபிக்கவும், விமானம், பஸ் விபத்துகளில் இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காணவும், ஒருவரின் டி.என்.ஏ., சோதனை முக்கிய பங்கு வகிக்கிறது.
குற்றங்கள் நடக்கும்போது, சம்பவ இடத்தில் கிடைக்கும் ரத்தம், தலைமுடி, தோல், உடல் உறுப்புகள், விந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்படுகின்றன.
கொலையானவரின் அருகில் அல்லது சம்பவ இடத்தின் அருகில் கிடைக்கும் சாட்சிகள், குற்றவாளிக்கு தொடர்புடையதா, இல்லையா என்பதை கண்டுபிடிக்க, டி.என்.ஏ., பரிசோதனை அறிக்கை உதவும்.
மாண்டியா, மளவள்ளியில் டியூஷனுக்கு சென்ற 11 வயது சிறுமியை, பாடம் கற்றுத்தரும் டியூஷன் ஆசிரியரே, 2024ல் கடத்திச் சென்று பலாத்காரம் செய்து, கொலை செய்து தண்ணீர் தொட்டியில் போட்டுவிட்டு தப்பினார்.
போலீசார் விசாரணை நடத்தி, காந்தராஜுவை, 51, கைது செய்தனர். இவரின் மாதிரிகளை சேகரித்து, டி.என்.ஏ., பரிசோதனைக்கு போலீசார் அனுப்பினர். ஓராண்டுக்கு பின் அறிக்கை வந்தது.
இது குற்றவாளியுடன் பொருந்தியதால், மாண்டியாவின் சிறப்பு போக்சோ நீதிமன்றம், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் டி.என்.ஏ., அறிக்கை முக்கிய பங்கு வகித்தது.
அறிக்கை விரைந்து கிடைத்தால், குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுத்தர முடியும். ஆனால் தடயவியல் ஆய்வறிக்கை தாமதமாவதால், சில நேரங்களில் குற்றவாளிகள் தப்பிக்க நேரிடுகிறது. பெங்களூரில் மட்டுமே தடயவியல் ஆய்வகம் உள்ளது.
அனைத்து வழக்குகளின் மாதிரிகள், டி.என்.ஏ., பரிசோதனைக்கு, இதே ஆய்வகத்துக்கு வருகின்றன. இதனால் வேலைப்பளு அதிகரிக்கிறது. விரைந்து அறிக்கை அளிப்பதிலும், சிக்கல் ஏற்படுகிறது.
கடந்த 2020ல் துவக்கத்தில், பெங்களூரின் தடயவியல் ஆய்வகத்துக்கு, ஆண்டுக்கு 826 மாதிரிகள் அனுப்பப்பட்டன. இதில் டிசம்பர் 31 வரை 710 அறிக்கைகள் அளிக்கப்பட்டன. தற்போது பழைய வழக்குகள் உட்பட, 1,213 மாதிரிகளுக்கு அறிக்கை வரவில்லை. 2024ல் 4,035 வழக்குகளின் மாதிரிகள் வந்தன. இது 2020ம் ஆண்டை விட, ஐந்து மடங்கு அதிகம்.
டி.என்.ஏ., பரிசோதனைக்கு வரும் மாதிரிகள் எண்ணிக்கை, ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கிறது. அறிக்கை தாமதமாவதால், வழக்குகள் தேங்குகின்றன.
இதற்கு தீர்வு காணும் நோக்கில், ஹூப்பள்ளியில் உள்ள மண்டல தடயவியல் ஆய்வகத்தில், இரண்டு டி.என்.ஏ., பரிசோதனை பிரிவுகள் அமைக்கப்படுகின்றன. இவை இன்னும் ஒரு மா தத்தில் செயல்பட துவங்கவுள்ளன.
அதன்பின் ஒன்று முதல் ஒன்றரை மாதத்தில் அறிக்கை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க செய்வோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

