பூங்கா மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காதீர்கள் எம்.பி., தேஜஸ்வி சூர்யா வேண்டுகோள்
பூங்கா மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காதீர்கள் எம்.பி., தேஜஸ்வி சூர்யா வேண்டுகோள்
ADDED : ஆக 26, 2026 11:25 PM

பெங்களூரு: ' பூங்காக்கள் பாதுகாப்பு திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டாம்' என, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம், பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கர்நாடக அரசு பூங்காக்கள் பாதுகாப்பு திருத்த மசோதா - 2026ஐ சட்டசபை, மேல்சபையில் தாக்கல் செய்து, மாநில அரசு ஒப்புதல் பெற்றது. இதை அங்கீகரிக்க கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிற்கு, அரசு அனுப்பியுள்ளது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், பெங்களூரு தெற்கு பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், லோக்பவனில் கவர்னர் கெலாட்டை நேற்று சந்தித்தனர். பூங்காக்கள் பாதுகாப்பு திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டாம் என்று கோரிக்கை வைத்து மனு அளித்தனர்.
பின், தேஜஸ்வி சூர்யா அளித்த பேட்டி:
பூங்காக்கள் பாதுகாப்பு திருத்த மசோதா, பூங்கா நிலத்தின், 5 சதவீதத்தை அரசு பயன்படுத்த அனுமதி அளிக்கிறது. இந்த மசோதா அமலுக்கு வந்தால் லால்பாக் தாவரவியல் பூங்கா, கப்பன் பூங்கா போன்ற பசுமை பகுதிகள், ரியல் எஸ்டேட், வணிக சொத்துக்களாக மாறி விடும்.
பூங்காக்கள் வெறும் அரசு சொத்துக்கள் இல்லை. அவை மக்கள் ஆரோக்கியம், பல்லுயிர் பெருக்கத்திற்கான இடம். சுரங்க பாதை திட்டத்தை செயல்படுத்த லால்பாக் பூங்கா நிலம் தேவைப்படுவதால் இந்த மசோதாவை கொண்டு வந்துள்ளனர்.
சுரங்கப்பாதை திட்டத்திற்கு எதிராக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், லால்பாக்கில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டம் நடத்துகின்றனர். இதை அரசு கண்டுகொள்ளவில்லை.
எதிர்க்கட்சியினரிடம் கலந்தாலோசிக்காமல் மசோதாவை அரசு நிறைவேற்றியது சரியல்ல. மசோதா அமலுக்கு வந்தால் தோட்ட நகரம் என்ற பெயரை, பெங்களூரு இழந்து விடும். அனைத்தையும் கவர்னரிடம் எடுத்து கூறி, மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டாம் என்று கேட்டுள்ளோம்.
அரசை கண்டித்து வரும் 30 ம் தேதி லால்பாக் வளாகத்திற்குள் நடைபயண போராட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
