'சில்லரை இல்லை என்பதற்காக பஸ்சிலிருந்து இறக்கி விடக்கூடாது'
'சில்லரை இல்லை என்பதற்காக பஸ்சிலிருந்து இறக்கி விடக்கூடாது'
ADDED : ஜூலை 14, 2026 04:02 AM
பெங்களூரு: பி.எம்.டி.சி., பஸ்சில் பயணித்த போக்குவரத்து துறை அமைச்சர் பைரதி சுரேஷ், நேற்று போக்குவரத்து ஊழியர்களுக்கு புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
போக்குவரத்து துறை அமைச்சர் பைரதி சுரேஷ், நேற்று முன்தினம் பி.எம்.டி.சி., பஸ்சில் பயணித்தார். தான் செல்லும் இடத்துக்கான இரண்டு டிக்கெட் கேட்டு, 100 ரூபாய் கொடுத்தார். டிக்கெட்டுக்கான சில்லரையை மட்டும் கொடுக்கவும்; இல்லையெனில் பஸ்சில் இருந்து கீழே இறங்கும்படி கூறினார்.
அதிருப்தி அடைந்த அமைச்சர் பைரதி சுரேஷ், நடத்துநரை கண்டித்தார். இதுபோன்று பல பஸ்களில் பயணித்து நடத்துனர், ஓட்டுநரின் நடவடிக்கையை கண்காணித்தார்.
இதையடுத்து நேற்று போக்குவரத்து அதிகாரிகளுக்கு அவசர உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
பணிமனையில் இருந்து புறப்படும் பஸ்கள், நியமிக்கப்பட்ட பஸ் நிறுத்தங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும். பயணியர் வசதிக்காக பஸ்களை நிறுத்தத்திற்கு முன்னதாகவோ அல்லது நடுவில் நிறுத்தி இறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ஊழியர்கள், பயணியரிடம் மரியாதையின்றி நடந்து கொள்ளும் சம்பவங்கள் சமீபத்தில் பதிவாகி உள்ளன. இந்த புகார்களை கருத்தில் கொண்டு, இனி பயணியரிடம் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்.
சில்லரை இல்லை என்ற காரணத்தை காண்பித்து, அந்த நபரை பஸ்சில் இருந்து இறக்கி விடக்கூடாது. டிக்கெட் கட்டணத்தை செலுத்த 'யு.பி.ஐ., கியூஆர்' குறியீட்டை பயன்படுத்தும்படி அறிவுறுத்த வேண்டும்.
டிக்கெட் வழங்கும் இயந்திரத்தில் குறிப்பிடப்படாத பஸ் நிறுத்தங்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பிட்ட ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மீது அதிக புகார்கள் வந்தால், அவர்களுக்கு சாலை பாதுகாப்பு, கண்ணியமான சேவை குறித்து தினமும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சிறப்பாக பணியாற்றும் நடத்துநர்கள், ஓட்டுநர்களுக்கு பாராட்டு கடிதம் வழங்கி, கவுரவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
