ADDED : செப் 18, 2025 07:40 AM
ராஜகோபால்நகர்: பெ ங்களூரு, ராஜகோபால்நகர் ஹெக்கனஹள்ளியை சேர்ந்தவர் ராஜேஷ், 34. இவரது மனைவி மேகா, 32. இவர்கள் இருவரும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு 11 மாத பெண் குழந்தை உள்ளது.
திருமணத்தின்போது ராஜேஷுக்கு, மேகாவின் குடும்பத்தினர் நகை, பணம் வரதட்சணையாக கொடுத்துள்ளனர். கடந்த சில மாதங்களாக கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி, மனைவியிடம் கணவர் கேட்டுள்ளார். இதற்கு மறுத்ததால் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு உள்ளது.
மேகாவை, ராஜேஷ் கொடுமைப்படுத்தி உள்ளார். மனம் உடைந்த மேகா, நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த, மாத்திரைகளை அதிகமாக தின்று தற்கொலைக்கு முயன்றார். அவரை கணவர் மற்றும் குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சிகிச்சை பலனளிக்காமல் மேகா இறந்தார். மேகாவின் பெற்றோர் அளித்த புகாரில், ராஜகோபால்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ராஜேஷிடம் விசாரணை நடக்கிறது.