/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தொழில்நுட்ப ரீதியான விசாரணையால் சிக்கினேன் டாக்டர் மகேந்திர ரெட்டி ஒப்புதல் வாக்குமூலம்
/
தொழில்நுட்ப ரீதியான விசாரணையால் சிக்கினேன் டாக்டர் மகேந்திர ரெட்டி ஒப்புதல் வாக்குமூலம்
தொழில்நுட்ப ரீதியான விசாரணையால் சிக்கினேன் டாக்டர் மகேந்திர ரெட்டி ஒப்புதல் வாக்குமூலம்
தொழில்நுட்ப ரீதியான விசாரணையால் சிக்கினேன் டாக்டர் மகேந்திர ரெட்டி ஒப்புதல் வாக்குமூலம்
ADDED : அக் 23, 2025 11:13 PM

பெங்களூரு: 'தொழில்நுட்ப ரீதியாக விசாரிப்பீர்களென தெரிந்திருந்தால், கொலையே செய்திருக்க மாட்டேன்' என, டாக்டர் கிருத்திகா ரெட்டி கொலையில் கைதான கணவர் மகேந்திர ரெட்டி கூறியதுடன், 'மனைவியை கொன்றது நான் தான்' என்றும் ஒப்புக் கொண்டுள்ளார்.
பெங்களூரு, மாரத்தஹள்ளி முனேகொலலுவை சேர்ந்த டாக்டர் கிருத்திகா ரெட்டி, 28, கொலை வழக்கில், அவரது கணவரான டாக்டர் மகேந்திர ரெட்டி கடந்த 15ம் தேதி கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தங்கள் காவலில் எடுத்து, போலீசார் விசாரித்தனர்.
எட்டு நாட்கள் விசாரணைக்கு பின், பெங்களூரு மேயோ ஹால் நீதிமன்ற வளாகத்தில் உள்ள, 29வது ஏ.சி.எம்.எம்., நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க, நீதிபதி உத்தரவிட்டார். மருத்துவ பரிசோதனைக்கு பின், பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.
கிருத்திகாவை கொலை செய்யவில்லை என்று விசாரணையின்போது போலீசாரிடம் அவர் திரும்ப, திரும்ப கூறினார். கடைசியில் கிருத்திகாவை கொன்றதை அவர் ஒப்புக் கொண்டார்.
வெறுப்பு விசாரணையின்போது போலீசாரிடம் அவர் கூறியது:
கிருத்திகாவுக்கு உடல்நல பிரச்னைகள் இருந்தன. அதை மறைத்து அவரது குடும்பத்தினர் அவருக்கு திருமணம் செய்து வைத்தனர். மருத்துவமனையில் காலையில் இருந்து மாலை வரை நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவிட்டு வீட்டிற்கு வருவேன்; வீட்டில் கிருத்திகாவுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இது எனக்கு வெறுப்பை ஏற்படுத்தியது.
விவாகரத்து கிருத்திகாவை விவாகரத்து செய்துவிடலாம் என்று நினைத்தேன். அப்படி செய்தால் மாமனாரின் சொத்து கிடைக்காமல் போய்விடும்; சமூகத்தில் மரியாதையும் கெட்டுவிடும் என்று தோன்றியது. இதனால் விவாகரத்து செய்வதற்கு பதிலாக, கொலை செய்து விடலாம் என திட்டமிட்டேன்.
திருமணத்திற்கு முன், வேறு ஒரு பெண்ணுடன் எனக்கு தொடர்பு இருந்தது உண்மை தான். ஆனால் அந்த பெண்ணிற்காக, கிருத்திகாவை கொலை செய்யவில்லை.
கிருத்திகாவின் உடலில் செலுத்தப்பட்ட மயக்க மருந்து, 24 மணி நேரம் தான் உடலில் இருக்கும். அதற்கு பின், உடலில் மயக்க மருந்து செலுத்தப்பட்டதற்கான தடயம் கிடைக்காது.
இதை மனதில் வைத்தே அவருக்கு மயக்க மருந்து செலுத்தினேன். ஆனாலும் பிரேத பரிசோதனையில் சிக்கிக் கொண்டேன். இந்த வழக்கில் தொழில்நுட்ப ரீதியாக சில தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த அளவுக்கு விசாரணை நடக்கும் என்று தெரிந்திருந்தால், கிருத்திகாவை கொலை செய்தே இருக்க மாட்டேன்.
இவ்வாறு போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் மகேந்திர ரெட்டி கூறி உள்ளார்.
கூடுதல் சாட்சி இதற்கிடையில் மகேந்திர ரெட்டியிடம் கைப்பற்றப்பட்ட அவரது மொபைல் போனில், சில மெசேஜ்கள் அழிக்கப்பட்டிருந்தது தெரிந்தது. என்னென்ன அழிக்கப்பட்டது என்பதை மீட்டெடுக்க, தடயவியல் ஆய்வகத்திற்கு போலீசார் அனுப்பினர்.
மொபைலில் இருந்து மீட்டெடுக்கப்பட்ட தகவலின்படி, 'கிருத்திகாவை நான் கொன்றுவிட்டேன்' என, நண்பர் ஒருவருக்கு, மகேந்திர ரெட்டி மெசேஜ் அனுப்பியதும் தெரிய வந்துள்ளது. விசாரணைக்கு ஆஜராக அந்த நபருக்கு, சம்மன் அனுப்ப போலீசார் தயாராகி வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் நேற்று கூறுகையில், ''கிருத்திகாவை கொலை செய்தது பற்றி, மகேந்திர ரெட்டி போலீஸ் முன்னிலையில் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதை சாட்சியாக சமர்பித்தால் மட்டும் போதுமானதாக இருக்காது. நீதிமன்றத்திற்கு இதை விட கூடுதல் சாட்சியம் தேவை. குற்றப்பத்திரிகையில் வலுவான ஆதாரங்களை சேர்க்கும் பணி நடந்து வருகிறது,'' என்றார்.

