ADDED : ஜூலை 18, 2026 11:01 PM

- நமது நிருபர் -:
தாவணகெரே மாவட்டத்தின் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவராக இருப்பவர் சாந்தா பட். இவர், மருத்துவ பணி மட்டுமின்றி, சமூக பணியிலும் ஈடுபட்டு வருகிறார். ஈரமான, உலர்ந்த மற்றும் மனித கழிவுகளை உரமாக மாற்றும் முறை குறித்து, அப்பகுதியினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
இவர், எஸ்.எஸ்., என்ற பெயரிலான அமைப்பை உருவாக்கி, தான் வசிக்கும் பகுதியான எஸ்.எஸ்., லே - அவுட் மற்றும் ஆஞ்சநேயா லே - அவுட் பகுதிகளில் உலர்ந்த கழிவுகளை போடுவதற்காக, சாலைகளில் உள்ள மரத்தில் பையை தொங்க விட்டுள்ளார்.
அத்துடன், 'குப்பையை சாலையில் கொட்டாமல், இந்த பையில் போடவும்' என சிறிய அறிவிப்பு பலகையும் அதன் மீது வைத்துள்ளார். இதனால் பொது மக்கள், குப்பையை சாலைகளில் வீசாமல், இந்த பையில் போட்டு செல்கின்றனர்.
கடந்த, 2014 முதல், எஸ்.எஸ்., அமைப்பு மூலம் சாந்தா பட், குப்பை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இதனால் இப்பகுதி சாலைகள் சுத்தமாக உள்ளன.
தாங்கள் வசிக்கும் சாலை சுத்தமாக இருப்பதால், மகிழ்ச்சி அடைந்துள்ள இப்பகுதி மக்கள், சாலை ஓரத்தில் உள்ள மரங்களில் தொங்கும் பையில் குப்பையை போடுகின்றனர்.
இதனால் மாநகராட்சி ஊழியர்களும், குனிந்து குப்பையை எடுக்காமல், பையில் இருந்து குப்பையை எடுத்து செல்கின்றனர். சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நட்டும், சுவர்களில் விழிப்புணர்வு ஓவியங்களையும் வரைந்து அசத்துகின்றனர்.
இவ்வமைப்பினர், தாவணகெரே நகர் முழுதும், குப்பையை தரம் பிரிப்பது குறித்து பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.
குப்பை சேகரிப்பு குறித்து, இப்பகுதியினர் கூறியதாவது:
எஸ்.எஸ்., அமைப்பினர் இத்தகைய துாய்மை பணிகளை, மற்ற இடங்ளிலும் செய்துள்ளனர். காலி இடங்களில் வளர்ந்திருந்த செடிகளை அகற்றி, சுத்தமாக வைத்து உள்ளோம். உலர் குப்பையை சேகரிக்க இப்குதியில், 15 முதல், 20 பைகள் வைத்துள்ளோம்.
இதனால் யாரும் சாலையில் குப்பையை வீசுவதில்லை. குப்பைகளை இதில் போடும் அறிவிப்பு பலகையும் வைத்துள்ளனர். சுத்தமாக இருப்பதால், தினமும் காலை, மாலையில் இச்சாலைகளில் மக்கள் நடைபயிற்சி செய்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
� குப்பையை கொட்ட வசதியாக மரத்தில் பையை கட்டிய டாக்டர் சாந்தா பட். � சுவர்களில் வரையப்பட்டு விழிப்புணர்வு ஓவியங்கள்.
