ஒருவழி சாலையில் எதிரே வாகனம் ஓட்டினால் ரூ.5,000 நடைபாதைகளில் நிறுத்தினால் ரூ.5,000 அபராதம்
ஒருவழி சாலையில் எதிரே வாகனம் ஓட்டினால் ரூ.5,000 நடைபாதைகளில் நிறுத்தினால் ரூ.5,000 அபராதம்
ADDED : செப் 30, 2026 11:11 PM

பெங்களூரு: ''அரை ஹெல்மெட் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பஸ் கட்டணம் உயர்த்தப்படும்,'' என, போக்குவரத்து துறை அமைச்சர் பைரதி சுரேஷ் கூறினார்.
பெங்களூரு நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கையாளுவது, சாலை பாதுகாப்பை அதிகரிப்பது, போக்குவரத்து விதிமீறல்களை தடுப்பது தொடர்பாக, உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே, போக்குவரத்து துறை அமைச்சர் பைரதி சுரேஷ் ஆகியோர், பெங்களூரில் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின், பைரதி சுரேஷ் அளித்த பேட்டி:
நான்கு போக்குவரத்து கழகங்களில் இருந்தும் பஸ் கட்டணத்தை உயர்த்த கோரிக்கை வந்துள்ளது. இதுகுறித்து பரிசீலிக்க ஓய்வு ஐ.ஏ.எஸ்., அதிகாரி அதுல் திவாரி தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. குழு அளிக்கும் அறிக்கை அடிப்படையில் பஸ் கட்டணம் உயர்த்தப்படும்.
போக்குவரத்து கழகங்கள் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வருவதால், பஸ் கட்டண உயர்வு தவிர்க்க முடியாததாக உள்ளது.
மத்திய அரசு ஓராண்டில் நான்கு முறை டீசல் விலையை உயர்த்தியுள்ளது. இதனால் போக்குவரத்து கழகங்களுக்கு ஆண்டிற்கு, 8,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.
பெண்கள் இலவச பயணம் செய்யும் 'சக்தி' திட்டத்தை மேம்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. தகுதியான பெண்களுக்கு ஸ்மார்ட் அட்டை வழங்கப்படும். இரண்டு மாதங்களில் ஸ்மார்ட் அட்டைகள் வினியோகம் செய்யப்படும்.
மத்திய அரசின் உதவியுடன் பெங்களூருக்கு 4,500 மின்சார பஸ்கள் வாங்கப்படும்.
இரு சக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் முழு ஹெல்மெட் அணிய வேண்டும். அரை ஹெல்மெட் பயன்படுத்த கூடாது.
அரை ஹெல்மெட் உற்பத்தி, பயன்பாட்டிற்கு முழுமையாக தடை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக விதிகள் வகுக்கப்படும். அரை ஹெல்மெட் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுபோல, நடைபாதைகளில் வாகனங்களை நிறுத்துவோருக்கான அபராத தொகையை 500 ரூபாயில் இருந்து 5,000 ரூபாயாக உயர்த்தவும், ஒரு வழி சாலையில் எதிரே வாகனம் ஓட்டுவோருக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
இவ்வாறு கூறினார்.
