தசரா பண்டிகை: பீரங்கி குண்டுவெடிப்பு ஒத்திகை: யானைகள், குதிரைகள் பங்கேற்பு
தசரா பண்டிகை: பீரங்கி குண்டுவெடிப்பு ஒத்திகை: யானைகள், குதிரைகள் பங்கேற்பு
UPDATED : அக் 08, 2026 12:17 AM
ADDED : அக் 07, 2026 11:04 PM

மைசூரு: தசரா ஜம்பு சவாரியில் பங்கேற்கும் யானைகள், குதிரைகளுக்கு, நேற்று பீரங்கி குண்டுவெடிப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.
மைசூரு தசராவின் நிறைவு நாளான ஜம்பு சவாரியில், சாமுண்டீஸ்வரி தேவியின் ஊர்வலம் நடக்கும். இதில், யானைகள், குதிரைகள் பங்கேற்கும். ஊர்வலம் துவக்கும் வகையில், பீரங்கி குண்டுவெடிப்பு நிகழ்ச்சி நடத்தப்படும்.
இந்த சத்தத்தால், யானைகள், குதிரைகள் மிரளக்கூடாது என்பதற்காக, நேற்று, நகரின் குஷால் கார்டனில் யானைகள், குதிரைகளுக்கு பீரங்கி குண்டுவெடிப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.
இதில், 13 யானைகள், 40 குதிரைகள் பங்கேற்றன. ஏழு பீரங்கிகள் மூலம் தலா மூன்று சுற்றுகள் என, 21 முறை குண்டுகள் வெடிக்கப்பட்டன.
இதுகுறித்து, நகர போலீஸ் கமிஷர் சீமா லட்கர் அளித்த பேட்டி:
வனத்துறை, நகர ஆயுதப்படையுடன் இணைந்து முதற்கட்ட ஒத்திகை நடத்தப்பட்டது. இதில், பயிற்சி பெற்ற, 36 வீரர்கள் பங்கேற்றனர். விஜயதசமியன்று நடக்கும் ஜம்பு சவாரியின் போதும், அன்று மாலை பன்னிமண்டபத்தில் நடக்கும் தீப்பந்த ஊர்வலத்தின் போதும் என, இரண்டு முறை பீரங்கி குண்டுவெடிப்புகள் நடத்தப்படும்.
இந்த சத்தத்திற்கு விலங்குகள் மிரளக்கூடாது என்பதற்காக, ஒத்திகை நடத்தப்பட்டது. இன்னும் இரண்டு முறை, இத்தகைய ஒத்திகை நடத்தப்படும். இன்றைய ஒத்திகை வெற்றிகரமாக அமைந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
தலைமை வன பாதுகாவலர் ரவிசங்கர் கூறுகையில், ''ஓய்வுபெற்ற அபிமன்யு யானை தலைமையில் இன்றைய ஒத்திகை சிறப்பாக நடந்து முடிந்தது. இதில், ஸ்ரீராமா என்ற யானை மட்டும் லேசாக மிரண்டது. எனினும், அந்த யானை கட்டுப்பாட்டில் இருந்தது,'' என்றார்.
நகரில் நிலவும் வெப்பம் காரணமாக, யானைகள் மூன்று வேளை குளிப்பாட்டப்படுகின்றன. யானைகளின் உடல் வெப்ப நிலையை சீராக வைக்க, தேனும், தயிரும் கொடுக்கப்படுகின்றன. இவ்விழா முடிந்ததும், அபிமன்யு யானையை சுதந்திரமாக சுற்றித்திரிய விட்டுவிடுவோம்,'' என்றார்.
