/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மாணவர் சேர்க்கை அதிகரிக்க தனியார் வழியில் கல்வித்துறை
/
மாணவர் சேர்க்கை அதிகரிக்க தனியார் வழியில் கல்வித்துறை
மாணவர் சேர்க்கை அதிகரிக்க தனியார் வழியில் கல்வித்துறை
மாணவர் சேர்க்கை அதிகரிக்க தனியார் வழியில் கல்வித்துறை
ADDED : ஜூன் 10, 2025 02:14 AM
பெங்களூரு: அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, தரமான கல்வியுடன், இலவச உணவு, சீருடை, புத்தகங்கள், ஷூ, சாக்ஸ் என அனைத்து சலுகைகளும் அளிக்கப்படுகின்றன. ஆனாலும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முடியவில்லை.
இதுகுறித்து, பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பயன் இல்லை. ஆண்டுக்கு ஆண்டு, மாணவர்கள் எண்ணிக்கை குறைவதால் அரசு பள்ளிகளை மூடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுவாக தனியார் பள்ளிகள், அதிகமாக விளம்பரம் செய்கின்றன. தங்கள் பள்ளிகளில் படித்து அதிக மதிப்பெண் பெற்று சாதனை செய்த மாணவர்களின் பெயர், படம், பள்ளிகளில் கிடைக்கும் சலுகைகள் குறித்து பொது இடங்களில் போஸ்டர் ஒட்டுகின்றன. இதே வழிமுறையை கையாள, கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தனியார் பள்ளிகள் போன்று, பொது இடங்களில் அரசு பள்ளிகளின் சலுகைகள், சாதனைகள் பற்றி போஸ்டர் ஒட்டும்படி, கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
மே 29ம் தேதி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவங்கியது. ஜூன் வரை மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் இலவச பாட புத்தகங்கள், சீருடை, ஷூக்கள், சாக்ஸ் வழங்கப்படுகிறது. தினமும் ஊட்டச்சத்தான மதிய உணவு, வாரத்தில் ஆறு நாட்கள் முட்டை, வாழைப்பழம், ஷிர பாக்யா திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு பாலுடன், ராகி மால்ட் வழங்குவது உட்பட அரசின் சலுகைகள், கல்வியின் தரத்தை அதிகரிக்க அரசு செயல்படுத்திய திட்டங்கள் அடங்கிய போஸ்டர்கள் தயார் செய்யப்படுகின்றன.
எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் 2024 - 25ம் ஆண்டில் 625க்கு 625 மதிப்பெண் பெற்ற மாணவர், மாணவியர் படங்களும் போஸ்டரில் இருக்கும்.
போஸ்டரில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பாவின் படங்களும் இருக்கும். அரசு பள்ளிகளின் முன் பகுதி, பஸ் நிலையங்கள் உட்பட மற்ற பொது இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.