sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

ஈஜிபுரா கோதண்டராம சுவாமி கோவில் கோலாகலம்

/

ஈஜிபுரா கோதண்டராம சுவாமி கோவில் கோலாகலம்

ஈஜிபுரா கோதண்டராம சுவாமி கோவில் கோலாகலம்

ஈஜிபுரா கோதண்டராம சுவாமி கோவில் கோலாகலம்


ADDED : மே 30, 2025 11:29 PM

Google News

ADDED : மே 30, 2025 11:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு ஈஜிபுராவில் 150 ஆண்டு பழமை வாய்ந்த கோதண்டராம சுவாமி கோவில் உள்ளது.

ஈஜிபுரா என்பதற்கு 'இலுப்பை பூக்கள் நிறைந்த காடு' என்று பொருள். இந்த அழகான இடத்தில், 1.5 ஏக்கரில் ரம்மியமாக காட்சி அளிக்கிறது.

இக்கோவிலை ஆந்திரா பெனுகோண்டாவின் ராஜ்ய சமஸ்தானத்தே சேர்ந்தோரே நிர்வகித்து வந்தனர். தற்போது, இந்த சமஸ்தானத்தின், ஐந்தாம் தலைமுறையை சேர்ந்த டாக்டர் சதானந்தம் கோவிலை நிர்வகித்து வருகிறார்.

இவருக்கு நீண்ட நாட்களாகவே, அதிசயமான வியக்கத்தக்க, உலகத்தின் அனைத்து கடவுள்களையும் ஒன்றிணைத்த (Universal god) ஒன்றை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. சனாதனத்திலும், இந்த பிரபஞ்சத்திலும் உள்ள அனைத்து கடவுள்களையும் சேர்த்து 'ஏக சிலா ரூபம்' வடிவமைக்க ஆசைப்பட்டார்.

உலகிேலயே மிக உயரமான 108 அடி உயர நின்ற திருக்கோலத்தில் விஸ்வரூப தரிசனத்தில் ஸ்ரீவிராட விஸ்வரூப மஹாவிஷ்ணு எழுந்தருள திருவுளம் கொண்டார்.

650 டன் எடை


இதற்காக, தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகாவில் உள்ள குரக்கோட்டையில், 650 டன் எடை கொண்ட பாறையை தேர்வு செய்தனர். விஸ்வரூப மஹா விஷ்ணுவின் முகம் மட்டும் செதுக்கப்பட்டது.

அங்கிருந்த 240 சக்கரங்கள் கொண்ட வாகனத்தில் புறப்பட்டது. பல மாத பயணத்திற்கு பின், ஈஜிபுரா கோதண்டராம சுவாமி கோவிலுக்கு, வந்து சேர்ந்தது. வழியெங்கும் பக்தர்கள் வழிபட்டனர். கோவிலின் பெயர் மேலும் பிரபலமடைந்தது.

கடந்த 2019ம் ஆண்டு நவம்பரில் கோவிலுக்கு வந்தது. அப்போது, சிலையை கோவிலுக்குள் எடுத்து வர முடியவில்லை. இதனால், கோவிலின் மதிற்சுவர் உடைக்கப்பட்டு, சிலை எடுத்து வரப்பட்டது. இதன் பின்னர், கொரோனா தொற்று ஏற்பட்டதால், சிலை பணிகள் தடைபட்டன. 2022ல் ராட்சத கிரேன் உதவியுடன், பீடத்தில் நிறுத்தப்பட்டடது. இவ்வேளையில் பல விதமான மண் சம்பந்தமான பரிசோதனைகள் செய்யப்பட்டன.

அன்று முதல் இன்று வரை, கடந்த மூன்று ஆண்டுகளாக, பணிகள் நடந்து வந்தன. 27 - 28 அடி அகலம், 108 அடி உயரம் உள்ள ஸ்ரீவிராட விஸ்வரூப மஹா விஷ்ணு திருவுருவ சிலை பணிகள் நிறைவு பெற்றன.

11 முகங்கள்


இந்த விக்ரஹத்தை தரிசிக்க இரு கண்கள் போதாது என்ற நிலை உள்ளது. விஷ்ணு 11 முகங்களுடன் காட்சி அளிக்கிறார்.

மத்தியில் உள்ள விஷ்ணு முகத்தின் இடது பக்கம் பரமேஸ்வர், சண்முகர், விநாயகர், நரசிம்மர், ரிஷி முனிவர்; வலது பக்கம் பிரம்மா, ஆஞ்சநேயர், அக்னி, கருடன், ரிஷி முனிவர் காட்சி அளிக்கின்றனர்.

இது உத்தவ கீதையில் வரும் விஷ்ணுவின் காட்சியை, நம் கண் முன்னே கொண்டு வருகிறது. இதை 'ஷிவகேசவ ரூபம்' எனவும் அழைப்பர்.

விஷ்ணுவை பார்க்கும் போது, நம்மை அறியாமல் கோவிந்தா... கோவிந்தா... என்ற நாமத்தை கூறுவோம். அந்த அளவுக்கு தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில், உள்ள இன்னொரு சிறப்பு என்னவென்றால், இடது பக்கம் சிவனின் அவதாரங்களும், வலது பக்கம் விஷ்ணுவின் அவதாரங்களும் செதுக்கப்பட்டு உள்ளன. கிரீடத்தில் சூரியன், சந்திரன்; கழுத்தில் நீலகண்ட ருத்ராக் ஷ மணிகள்; சப்த ரிஷிகள் ஹாரத்தில் காட்சி இருக்கிறார்கள்.

நெற்றியின் நடுவே ஞான நேத்ரம், புஜங்களில் நாரதர் மகரிஷி, பதினாறு கைகளுடன் பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கும் விதமாக காட்சி அளிக்கிறார்.

திருப்பதி


இவருக்கு தினமும் அபிேஷகம் செய்ய இயலாது. இதனால், சிலையின் கீழ்பகுதியில், சிலை போன்றே, சிறிய அளவிலான பஞ்ச லோகங்களால் ஆன விஷ்ணுவின் போக மூர்த்தி சிலை வைக்கப்பட்டிருக்கும்.தினமும், இவருக்கே அபிஷேகம் செய்யப்படும். திருப்பதி திருமலையில் எப்படி பூஜை நடக்குமே அது போலவே இங்கும் நடக்கும்.

கோவில் நுழை வாயிலிலேயே இவரை தரிசித்தவாறே, ராஜகோபுரத்தை கடந்து உள்ளே செல்ல வேண்டும். இடது புறத்தில் சிவன், விநாயகர், வள்ளி - தெய்வானையுடன் முருகர் என சிவ குடும்பத்தில் உள்ள மூவருக்கும் தனித்தனியாக சன்னிதிகளை தரிசிக்கலாம். இதிலிருந்து, ஹரியும், சிவனும் ஒன்று என்பதை உணர்ந்து கொள்ளலாம். இங்கு சைவம், வைணவம் என்ற பிரிவினைக்கு இடம் கிடையாது.

அப்படியே வலப்புறம் திரும்பினால், ஆஞ்சநேயர், நவக்கிரகம், தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கு தனி தனி சன்னிதிகள் உள்ளன. இவர்களை தரிசித்தவாறு சற்று முன்னே சென்றால், பூவராகன், அஷ்டலட்சுமிக்கு தனியாக சன்னிதிகளை பார்க்கலாம்.

மேலும், தெப்ப குளத்தில் காளிங்க நர்த்தனத்தில் கிருஷ்ணர், நவநீத கிருஷ்ணரும் காட்சி அளிக்கிறார்.

கர்நாடகாவில் சென்னப்பட்டணாவை தவிர்த்து, இந்த ஆலயத்தில் மட்டும் தான் நவநீத கிருஷ்ணர் விக்ரஹம் உள்ளது. அப்படியே கோவிலின் பிரகாரத்தில், 20 துாண்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றுக்கும், தனித்தனியே பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

கோவிலின் மூலவராக சாளக்கிராமத்தில் கோதண்டராமர், சீதாதேவி, லட்சுமணன்; உற்சவர் ஆதிசேஷர், சக்கரத்தாழ்வார், ராமானுஜர், ஆஞ்சநேயர் விக்ரஹங்கள் உள்ளன.

நேர்த்திக்கடன்


இந்த கோவிலில் மூலவர் கோதண்டராமரிடம் வேண்டிய வரங்கள் அனைத்தும் தங்கு தடையின்றி கிடைக்கும். இவரை பார்க்க வருவோர், பலரும் கடிதங்களில் தங்கள் வேண்டுதல்களை எழுதி விட்டு செல்கின்றனர்.

இவை அனைத்தும், அவர்கள் வேண்டிய சில நாட்களிலே நிறைவேறும் என்பது நம்பிக்கை. இங்கு துலாபாரம் செலுத்தும் வசதி உள்ளது. அன்னதானம் வழங்கியும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். கோவில் வளாகத்தில் உள்ள மண்டபம், 35 ஆண்டுகள் பழமையானது. இதில் குழந்தைகளுக்கான கற்றல்கள், ஏழைகளின் திருமணம் நடக்கிறது.

வைகுண்ட ஏகாதசி, ராமநவமி, மார்கழி மாதம் 30 நாட்களும் திருப்பாவை பாராயணம் செய்யப்படும். வளர்பிறை பிரதோஷம் ஆகியவை விசேஷமாக கொண்டாடப்படுகிறது. ராமநவமி அன்று திருத்தேர் பவனி வரும்.

மஹா கும்பாபிேஷகம்

பரவசத்துடன் நாளை துவக்கம்

பெருமை வாய்ந்த கும்பாபிேஷகம், ஜூன் 1 ம் தேதி காலை 6:30 மணி முதல் பகவத் வாசுதேவ புண்யாவச்சனம், மஹா கும்பம் நிறுவப்பட்டு வழிபடுதல், சிலைக்கு பஞ்சகவ்ய ஆராதனை, பஞ்சகவ்ய ஸ்நாபனம், சிலைக்கு தானியங்களை காணிக்கையாக வழங்குதல், யாகம் துவங்குதல், மூல மந்திரம், மூர்த்தி, குடும்ப, பரிகார ஹோமங்கள், சிலைக்கு மலர் சமர்ப்பித்தல், மஹா நெய்வேத்தியம், பிரசாத விநியோகம்;

மாலை 5:30 மணி முதல் விஷ்ணு சகஸ்ரநாம ஹோமம், மஹாரும்பாராதனை, பிண்டிரா பூஜை செய்து சிலை நிறுவுதல், கோபுர கலசம் நிறுவுதல். மூலமந்திர, அத்தன்யாச, பஞ்ச சூக்த, ஹரிவர் ஹோமங்கள், மஹா மங்களாரத்திக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம்;

ஜூன் 2 ம் தேதி காலை 6:00 மணி முதல் சுப்ரபாதம், பகவத் வாசுதேவ புண்யாவச்சனம், கொடி, கும்பம் வழிபாடு, மஹா கும்பாராதனை, மூல மந்திரம், விக்ரக, பிராண பிரதிஷ்டை, பரிவார, பிராயசித்த ஹோமங்கள், மஹா பூர்ணாஹீதி, மஹா கும்பாபிஷேகம். பஞ்சகவ்யா, கோபஷ்ட தரிசனங்கள், மஹா நைவேத்தியம், மஹா மங்களாரத்தி நடக்கிறது.

கும்பாபிேஷகத்திற்கு முன்னதாக 336 சுமங்கலிகள், சாளக்கிராம ஹாரமாலை, ருத்ராக் ஷ மாலை, திருமண் காப்பு, பரிவார மூர்த்தங்களின் பதக்கங்கள் அனைத்தும் ஊர்வலமாக நான்கு மாட வீதிகளிலும் எடுத்து வரப்பட்டு, பெருமாளுக்கு அலங்கரிப்பதற்காக சாற்றப்படும்.

பகல் 12:30 மணியிலிருந்து 12.45 மணிக்குள் புனிதநீர் ஊற்றப்படுகிறது. இதில், முக்கிய சிறப்பு என்னவென்றால், இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து, பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ளது. 108 அடி உயர சிலை பிரதிஷ்டை செய்யப்படும் அன்று, கும்பாபிஷேகமும் பக்தி பரவசத்துடன் நடக்கிறது. மேலுகோட்டே பேராசிரியர் செல்வப்பிள்ளை ஆச்சாரியார் தலைமையில் நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகள் கோவில் வளாகத்தில் தீவிரமாக நடந்து வருகின்றன.

ஐந்து யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த யாக குண்ட பூஜையில் 30 ஆச்சாரியார்கள் பங்கேற்பர். வரும் 6ம் தேதி ராமர் - சீதா திருக்கல்யாணம் நடக்கிறது. எனவே, பக்தர்கள் அனைவரும் திரளாக வருகை தரும்படி ஆலய நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்து உள்ளனர். கோவில் பூஜைகள் தொடர்பாக ஸ்ரீகாந்த் - 98840 73394; ஸ்ரீகுமார் - 99401 32369 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

மண்டல பூஜை

கும்பாபிஷேகம் முடிந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடக்கும். இந்த பூஜை, ஜூன் 3 ம் தேதி துவங்குகிறது. தினமும் காலை 9:00 மணி முதல் 11:00 மணி வரை போக மூர்த்தி சிலைக்கு அர்ச்சனைகள் நடக்கும். ஜூலை 20 ம் தேதி மண்டல பூஜை சிறப்புடன் நடக்கும்.

இதில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் ஆலய நிர்வாகத்தினரை தொடர்பு கொள்ளலாம். மண்டல பூஜையின் கடைசி நாள் விசேஷ பூஜைகள் நடக்கும். உபயதாரர்கள் கவுரவிக்கப்படுவர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்

- நமது நிருபர் -.






      Dinamalar
      Follow us