/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஜி.பி.ஏ., கமிஷனரை மாற்ற ஊழியர்கள் போர்க்கொடி
/
ஜி.பி.ஏ., கமிஷனரை மாற்ற ஊழியர்கள் போர்க்கொடி
ADDED : டிச 28, 2025 05:09 AM

பெங்களூரு: 'ஜி.பி.ஏ., வருவாய் துறை கமிஷனர் முனிஷ் மவுட்கில், அநாகரீகமாக பேசுவதால், அவரை இடமாற்றம் செய்ய வேண்டும்' என, ஜி.பி.ஏ., ஊழியர்கள் போர்க்கொடி துாக்கியுள்ளனர்.
ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தில் வருவாய் துறை கமிஷனராக இருப்பவர் முனிஷ் மவுட்கில். இவர் ஊழியர்களை சகட்டு மேனிக்கு திட்டியதாகவும், எல்லை மீறி பேசுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதைக் கண்டித்து ஜி.பி.ஏ., ஊழியர்கள் சங்கத்தினர் மெழுகு வர்த்தியை ஏந்தியபடி, ஜி.பி.ஏ., அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரை பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இதனிடையே, இ - பட்டா வழங்குவதில் வருவாய் துறை ஊழியர்கள் ஒழுங்காக பணியாற்றவில்லை என்று கூறி, கமிஷனர் முனிஷ் அநாகரீகமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த ஊழியர்கள் ஜி.பி.ஏ., தலைமை கமிஷனர் மஹேஸ்வர ராவிடம் முறையிட்டனர். அவர் அதற்கு சரியான பதில் அளிக்கவில்லை.
இதனால், ஆத்திரம் அடைந்த ஊழியர்கள் கமிஷனரை இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கூறி துணை முதல்வர் சிவகுமாருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
'முனிஷ் அநாகரீகமாக பேசுவதால், மன உளைச்சல் ஏற்படுகிறது. சஸ்பெண்ட், ஒழுங்கு நடவடிக்கை எடுப்பேன் என்று மிரட்டுகிறார்' என கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

