/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலக ஊழியர்களின் ரூ.70 கோடி அபேஸ்
/
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலக ஊழியர்களின் ரூ.70 கோடி அபேஸ்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலக ஊழியர்களின் ரூ.70 கோடி அபேஸ்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலக ஊழியர்களின் ரூ.70 கோடி அபேஸ்
ADDED : நவ 01, 2025 11:19 PM
கப்பன் பார்க்: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலக ஊழியர்களின் 70 கோடி ரூபாய் கையாடல் செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக ஊழியர்கள் சங்க தலைமை நிர்வாக அதிகாரி கோபிநாத், கணக்காளர் ஜெகதீஷ் மீது வழக்குப்பதிவாகி உள்ளது.
பெங்களூரு அசோக்நகர் பவிஷ்ய நிதி பவன் கட்டடத்தில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் பணி செய்வோர், பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு நிதி ரீதியாக உதவி செய்ய, 1961ம் ஆண்டு முதல் அலுவலகத்திலேயே சங்கம் செயல்பட்டு வருகிறது.
தங்களுக்கு கிடைத்த ஓய்வூதிய பணத்தை, எப்.டி., எனும் நிலையான வைப்பு நிதிக்கணக்கில் ஓய்வு பெற்ற ஊழியர்கள் செலுத்தினர்.
இதுபோல அலுவலகத்தில் தற்போது வேலை செய்வோரும், தங்கள் பணத்தை சங்கத்தில் முதலீடு செய்தனர். இவர்களுக்கு சங்கத்தில் இருந்து மாதந்தோறும் வட்டி பணம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக, சங்கத்தில் இருந்து வட்டி பணம் வரவில்லை. இதுபற்றி சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கோபிநாத், கணக்காளர் ஜெகதீஷிடம் கேட்டபோது, சில தொழில்நுட்ப காரணங்களால், வட்டி பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறி சமாளித்தனர். சந்தேகம் அடைந்த இன்னாள், முன்னாள் ஊழியர்கள், சங்கத்தின் பண இருப்பு குறித்து ஆராய்ந்தபோது, சங்கத்தின் வங்கிக்கணக்கில் வெறும் 3 கோடி ரூபாய் மட்டுமே இருப்பதும், 70 கோடி ரூபாயை கோபிநாத், ஜெகதீஷ் கையாடல் செய்ததும் தெரிந்தது. அவர்கள் இருவரும் தற்போது தலைமறைவாகிவிட்டனர்.
பணத்தை இழந்த ஊழியர்கள், கப்பன் பார்க் போலீஸ் நிலையத்தில் கோபிநாத், ஜெகதீஷ் மீது நேற்று புகார் செய்தனர். இருவர் மீதும் வழக்குப் பதிவானது.
பணம் கையாடல் செய்யப்பட்ட விவகாரத்தில், ஆடிட்டர்கள் சிலருக்கும் தொடர்பு இருப்பதாக, ஊழியர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

