/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நான்கு ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு: காங்., - எம்.எல்.ஏ., மீது வழக்கு
/
நான்கு ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு: காங்., - எம்.எல்.ஏ., மீது வழக்கு
நான்கு ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு: காங்., - எம்.எல்.ஏ., மீது வழக்கு
நான்கு ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு: காங்., - எம்.எல்.ஏ., மீது வழக்கு
ADDED : அக் 04, 2025 04:35 AM

ஹாவேரி: நான்கு ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக, ஷிகாவி காங்கிரஸ் எம்.எல்.ஏ., யாசிர் அகமது கான் பதான் உட்பட, நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹாவேரி ஷிகாவி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., யாசிர் அகமது கான் பதான். இவர், 2017ம் ஆண்டு, ஹனகல் ஹலகோட்டி கிராமத்தைச் சேர்ந்த, பக்கிர கவுடா என்ற விவசாயியிடம் 4 ஏக்கர் நிலம் வாங்க நினைத்தார்.
பத்திரப் பதிவு நடந்தபோது, சில குளறுபடிகள் நடப்பதை கண்டுபிடித்த பக்கிர கவுடா, 'நிலத்தை விற்க மாட்டேன்' என, யாசிர் அகமது கான் பதானிடம் கூறி உள்ளார்.
அதன்பின், சில மாதங்களாக, அந்த நிலத்தை தனக்கு பதிவு செய்து கொடுக்கும்படி, பக்கிர கவுடாவிடம், எம்.எல்.ஏ.,வும், அவரது உறவினர் மகபுல் அகமது கானும் கேட்டு வந்துள்ளனர். இதற்கு பக்கிர கவுடா மறுத்துவிட்டார்.
எனினும் 4 ஏக்கர் நிலத்தை, எம்.எல்.ஏ., தரப்பினர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்ததோடு, நிலத்தில் இருந்த 25 ஆண்டுகள் பழமையான, மரங்களை வெட்டி அழித்துள்ளனர்.
இதுகுறித்து புகார் அளித்தும் ஹனகல் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஹனகல் நீதிமன்றத்தை பக்கிர கவு டா நாடினார். யாசிர் அகமது கான் பதான், மகபுல் அகமது கான், இவர்களுக்கு உடந்தையாக இருந்த ஹாவேரி நில அளவை துறை அதிகாரி ஜெகதீஷ், நில பதிவேடு துறை உதவி இயக்குநர் சத்யநாராயணப்பா ஆகிய 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க போலீ சாருக்கு உத்தரவிட கோரி, மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜேஸ்வரி, எம்.எல்.ஏ., பதான் உட்பட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்ய, ஹனகல் போலீசாருக்கு சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின்படி எம்.எல்.ஏ., உட்பட நான்கு பேர் மீது, ஹனகல் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.எம்.எல்.ஏ., பதான் கூறுகையில், ''என் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு அரசியல் சதியின் ஒரு பகுதி. சட்டப்படி போராட்டம் நடத்துவேன்,'' என்றார்.
ஷிகாவி தொகுதிக்கு, கடந்த ஆண்டு நடந்த இடைத்தேர்தலில், யாசிர் அகமது கான் பதான் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.