/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
41,849 ஏரிகளின் ஆக்கிரமிப்பு டிசம்பர் மாதத்திற்குள் அகற்றம்
/
41,849 ஏரிகளின் ஆக்கிரமிப்பு டிசம்பர் மாதத்திற்குள் அகற்றம்
41,849 ஏரிகளின் ஆக்கிரமிப்பு டிசம்பர் மாதத்திற்குள் அகற்றம்
41,849 ஏரிகளின் ஆக்கிரமிப்பு டிசம்பர் மாதத்திற்குள் அகற்றம்
ADDED : அக் 09, 2025 11:04 PM

பெங்களூரு: “டிசம்பர் மாதத்திற்குள் 41,849 ஏரிகள் ஆக்கிரமிப்பு அகற்றப்படும்,” என, மாநில சிறிய நீர்ப்பாசன அமைச்சர் போசராஜு கூறினார்.
நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கும் வகையில், 'தண்ணீர் இருந்தால் நாளை' என்ற பெயரில், சிறிய நீர்ப்பாசனத்துறை சார்பில் புதிய திட்டம் நேற்று துவங்கப்பட்டது.
விதான் சவுதாவில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், மாநில சிறிய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் போசராஜு, சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல், திட்டத்தின் துாதரான நடிகர் வசிஷ்டா சிம்ஹா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கண்ணாடி பெட்டியில் இருந்த செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி திட்டத்தை துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் முதல்வர் சித்தராமையா பேசியதாவது:
நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் உருவாகி உள்ளது. ஆசியாவிலேயே ஏரிகளில் தண்ணீர் நிரப்புவதில், கர்நாடகா சிறந்த மாநிலமாக உள்ளது. நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த, சிறிய நீர்ப்பாசன அமைச்சர் போசராஜு நல்ல திட்டங்களை வகுக்கிறார்.
மாநிலத்தில் 37 லட்சம் ஆழ்துளைக்கிணறுகள் மூலம் நிலத்தடி நீர் பயன்படுத்தப்படுகிறது. மாநிலத்தில் 144 தாலுகாக்களை தவிர, மற்ற தாலுகாக்களில் நிலத்தடி நீர் பற்றாக்குறை உள்ளது. இதனால் தான் கோலார், சிக்கபல்லாபூர் மாவட்டங்களில் ஏரிகளை நிரப்ப கே.சி.வேலி திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். இங்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் போசராஜு பேசியதாவது:
ஏரிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற, சிறிய நீர்ப்பாசனத்துறை தொடர்ந்து பணியாற்றி வருகிறது. இதுவரை 35,000க்கு மேற்பட்ட ஏரிகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் எங்கள் துறை சார்பில் 1,018 ஏரிகள் நிரப்பப்படுகின்றன.
ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும் 2,714 பகுதிகளில் நிலத்தடி நீர் பற்றி தகவல் பெறுகிறோம். மாநிலத்தில் 60 சதவீத விவசாய நடவடிக்கை ஆழ்துளைக்கிணறு மூலம் நடக்கிறது.
ஒவ்வொரு நான்கு, ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை வறட்சி ஏற்படுகிறது. அந்த நேரத்தில் நிலத்தடி நீர் நமக்கு உதவியாக இருக்கும். நிலத்தடி நீர் சேமிப்பில் கர்நாடகா 10வது இடத்தில் உள்ளது. டிசம்பர் மாதத்திற்குள் 41,849 ஏரிகளின் ஆக்கிரமிப்பு அகற்றப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.