தேர்வு முறைகேடு வழக்கில் எஸ்.ஐ.டி., விசாரணைக்கு தடை
தேர்வு முறைகேடு வழக்கில் எஸ்.ஐ.டி., விசாரணைக்கு தடை
UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 11:14 PM
பெங்களூரு: கே.பி.எஸ்.சி., எனும் கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய கால்நடை மருத்துவர் தேர்வில் முறைகேடு நடந்தது பற்றி, மாநில அரசின் உத்தரவின்படி சி.ஐ.டி., விசாரணை நடத்தியது. ஆனால், கர்நாடக உயர் நீதிமன்றம், சிறை துறை டி.ஜி.பி., அலோக்குமார் தலைமையில் எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில், கர்நாடக அரசு மனு தாக்கல் செய்தது. இம்மனுவை நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, விஜய் பிஸ்னோய் அமர்வு நேற்று முன்தினம் விசாரித்தது.
அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் சசிகரண் ஷெட்டி, மூத்த வக்கீல் கபில் சிபல் ஆகியோர் வாதிடுகையில், ‘கால்நடை மருத்துவர் தேர்வு முறைகேடு தொடர்பான, சி.ஐ.டி., விசாரணை நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. சி.ஐ.டி., அதிகாரிகள் மீது எந்த குற்றச்சாட்டுகளும் இல்லை.
‘எஸ்.ஐ.டி., விசாரணை நடத்துவத ற்கு அவசியமும் இல்லை.’ என்றனர்.
அரசு தரப்பு வாதத்தை ஏற்று கொண்ட நீதிபதிகள், உயர் நீதிமன்றம் அமைத்த எஸ்.ஐ.டி., குழுவின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தனர். மேலும் இந்த குழுவில் உள்ள அதிகாரிகள் மீதான ஆட்சேபனை குறித்து சீல் வைத்த கவரில் அறிக்கை சமர்ப்பிப்பதுடன், வேறு அதிகாரிகள் பெயரையும் அரசு பரிந்துரை செய்யலாம் என்றனர்.
மேலும் மனு மீதான அடுத்த விசாரணையை 12ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
