/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் மாணவன் தோல்வி கேக் வெட்டி கொண்டாடிய குடும்பம்
/
எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் மாணவன் தோல்வி கேக் வெட்டி கொண்டாடிய குடும்பம்
எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் மாணவன் தோல்வி கேக் வெட்டி கொண்டாடிய குடும்பம்
எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் மாணவன் தோல்வி கேக் வெட்டி கொண்டாடிய குடும்பம்
ADDED : மே 03, 2025 11:11 PM

பாகல்கோட்: கர்நாடகாவில் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில் 62.34 சதவீதம் மாணவ - மாணவியர் தேர்ச்சி பெற்றனர். மாநில அளவில் தட்சிண கன்னடா முதல் இடத்திலும், கலபுரகி கடைசி இடத்திலும் உள்ளது. 16வது இடத்தில் பாகல்கோட் மாவட்டம் உள்ளது.
இதில் என்ன என்று கேட்கலாம். பாகல்கோட் மாவட்டம், சோளசகுட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் அபிஷேக் எல்லப்பா. இவர், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் 625க்கு 200 மதிப்பெண்கள் மட்டுமே பெற்று, ஆறு பாடங்களிலும் தோல்வி அடைந்தார்.
வழக்கமான பெற்றோராக இருந்தால், மகனை தட்டி அடித்திருப்பவர். சில பெற்றோருக்கு பயந்து தோல்வி அடைந்தவர்கள், ஊரை விட்டே சென்றுவிடுவர்.
ஆனால் மகன் சோகமாக இருப்பதை பார்த்த அவரது பெற்றோர், தம்பி, தங்கை என அனைவருக்கும் அவருக்கும் ஊக்கம் அளித்தனர்.
அபிஷேக் கன்னத்தில் முத்தம் கொடுத்த தந்தை, மகனின் தோளில் கைபோட்டு, 'தேர்வுகள் தான் நம் வாழ்க்கை அல்ல. அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம்' என்று உற்சாகப்படுத்தினார்.
அபிஷேக் தந்தை கூறுகையில், ''என் மகன், 18 மாத குழந்தையாக இருந்தபோது, இவரின் இரு கால்களும் தீயில் பாதிக்கப்பட்டன. அன்று முதல் இவருக்கு நினைவாற்றில் குறைவாகவே இருந்துள்ளது. இதனால் ஞாபக மறதியால், தேர்வில் சரியாக எழுத முடியவில்லை,'' என்றார்.
அபிஷேக் கூறுகையில், ''தேர்வில் தோல்வி அடைந்ததால், மிகவும் வருத்தம் அடைந்தேன். ஆனால என் பெற்றோர் எனக்கு தைரியம் கொடுத்தனர். தோல்வி அடைந்தபோதும், எனக்காக கேக் வெட்டிக் கொண்டாடி, எனக்கு ஊட்டிவிட்டனர். மீண்டும் தேர்வு எழுதி, தேர்ச்சி பெறுவேன். மீண்டும் தேர்வில் தோல்வி அடைந்தால், வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி பேறுவேன்,'' என்றார்.