விதான் சவுதா மரத்தில் துாக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்த விவசாயி
விதான் சவுதா மரத்தில் துாக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்த விவசாயி
ADDED : ஜூன் 10, 2026 03:39 AM

பெங்களூரு: பெங்களூரு விதான் சவுதா வளாகத்தில், விவசாயி ஒருவர் துாக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்தவரை போலீசார் காப்பாற்றினர்.
மாநில தலைமை செயலகமான பெங்களூரு விதான் சவுதாவிற்கு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் பலர் வருகை தருகின்றனர்.
நேற்று மதியம் விதான் சவுதா வளாகத்தில் தேவராஜ் அர்ஸ் சிலை அருகிலுள்ள மரம் ஒன்றில் ஏறிய நபர் ஒருவர், தான் துாக்கிட்டு தற்கொலை செய்ய போவதாக தெரிவித்தார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவரை காப்பற்றி, விதான் சவுதா போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
அவரிடம் விசாரித்தபோது, சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகாவின் ஹலியூர் கிராமத்தை சேர்ந்த விசுகுமார் என்பது தெரிந்தது.
'நெடுஞ்சாலை பணிக்காக, 2016ல் எனது நிலத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கையகப்படுத்தியது. என் நிலத்தில் சந்தன மரங்களை வளர்த்து வந்தேன். இதன் மதிப்பு, 62 கோடி ரூபாயாகும்.
'ஆனால், இதனை ஆய்வு செய்த வனத்துறையினர், இதன் மதிப்பு 62 லட்சம் ரூபாய் என குறைத்து உள்ளனர். இதுவரை நிலத்துக்கான நிவாரண பணம் வழங்கவில்லை' என்றார்.
போலீசார் கூறுகையில், 'இதே கோரிக்கையை வைத்து கடந்த பிப்ரவரி மாதத்தில் விதான் சவுதா வெளியே உள்ள மரக்கிளையை வெட்டி, கவனத்தை ஈர்க்க முயற்சித்தார். அப்போதும் அவர் கைது செய்யப்பட்டார்.
'பின், அவர் மீது அனுமதியின்றி போராட்டம் நடத்தியது; பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
'அத்துடன் விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் அவருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு உள்ளது' என்றனர்.
