ADDED : ஜூலை 14, 2026 04:06 AM
மாண்டியா: கே.ஆர்.எஸ்., அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்காததை கண்டித்து, பெங்களூரில் இருந்து மைசூரு செல்லும் சாலையை மறித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
மைசூரு கே.ஆர்.எஸ்., அணையில் தற்போது உள்ள நீரை குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும், பாசனத்திற்காக தண்ணீர் திறப்பது சாத்தியமில்லை என்றும் நீர்ப்பாசன துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி கூறியிருந்தார். தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்கப்படுவதாக, எதிர்க்கட்சியினர் குற்றஞ் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், பெங்களூரு -- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மாண்டியாவின் ஸ்ரீரங்கப்பட்டணா டவுனில் நேற்று விவசாயிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சில விவசாயிகள் சட்டையை கழற்றி அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், விவசாயிகளை அப்புறப்படுத்தினர்.
இதுபோல, பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி அணையின் நுழைவாயில் பகுதியில் ம.ஜ.த., முன்னாள் எம்.எல்.ஏ., ஸ்ரீ கண்டய்யா தலைமையில் போராட்டம் நடந்தது.
