/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
10 முறை பல்டி அடித்த கார் தந்தை - 2 மகன்கள் பலி
/
10 முறை பல்டி அடித்த கார் தந்தை - 2 மகன்கள் பலி
ADDED : ஏப் 03, 2025 07:46 AM

சித்ரதுர்கா : சித்ரதுர்கா அருகே, கட்டுப்பாட்டை இழந்த கார் 10 முறை பல்டி அடித்து கவிழ்ந்ததில், தந்தை - இரண்டு மகன்கள் உயிரிழந்தனர்.
சித்ரதுர்கா மொலகால்மூரு தாலுகா, ராம்புரா அருகே பொம்மகனஹள்ளி கிராம பகுதியில் நேற்று முன்தினம் மதியம், ஒரு கார் வேகமாக வந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடியது. சாலை தடுப்பு சுவரில் ஏறி எதிர்ப்பக்க சாலையை நோக்கிச் சென்றது. சென்ற வேகத்தில் கார் பல்டி அடிக்க ஆரம்பித்தது. பத்து முறை பல்டி அடித்து கவிழ்ந்தது.
இந்த விபத்து குறித்து அறிந்த ராம்புரா போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். காருக்குள் இறந்து கிடந்த 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. காருக்குள் படுகாயத்துடன் போராடிய 2 பெண்கள் உட்பட 3 பேரை மீட்டு, பல்லாரி விம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பினர்.
போலீசாரின் விசாரணையில் உயிரிழந்தவர்கள், யாத்கிரின் மவுலா அகமது, 35, இவரது மகன்கள் ரகுமான், 15, சமீர், 10, என்பதும், படுகாயம் அடைந்தவர்கள் மவுலா அகமதுவின் மனைவி சலிமா பேகம், 31, மகன் உசேன், 8, சலிமா தாய் பாத்திமா, 75, என்பதும் தெரிய வந்தது.
இவர்கள் பெங்களூரு சென்று கொண்டிருந்தபோது, கார் விபத்தில் சிக்கியது தெரிய வந்தது. கார் பல்டி அடித்து கவிழ்ந்த காட்சிகள் அடங்கிய வீடியோ, சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவுகிறது.

