கல்லுாரியில் புகுந்து மகளை கத்தியால் குத்திய தந்தை கைது
கல்லுாரியில் புகுந்து மகளை கத்தியால் குத்திய தந்தை கைது
ADDED : ஜூலை 30, 2026 11:32 PM

ராஜனுகுண்டே: திருமணத்திற்கு பின், சம்பளத்தை தர மாட்டேன் என்று கூறியதால், கல்லுாரியில் புகுந்து மகளை கத்தியால் குத்திய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு ரூரல் தேவனஹள்ளி தாலுகா விஜயபுராவில் வசிப்பவர் நாகேந்திரா, 55. இவருக்கு நான்கு மகள்கள் உள்ளனர்.
இவர்களில் இரண்டாவது மகள் லட்சுமி துர்கா, 25. ராஜனுகுண்டேயில் உள்ள தனியார் கல்லுாரியில் உதவி பேராசிரியையாக வேலை செய்கிறார்.
லட்சுமி துர்காவுக்கு கடந்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. தனது வருங்கால மருமகனிடம் சென்று, எனது மகளுக்காக நிறைய செலவு செய்துள்ளேன். திருமணத்திற்கு பின், நீங்கள் எனக்கு, 40 லட்சம் ரூபாய் தந்து விடுங்கள் என்றுநாகேந்திரா கேட்டுள்ளார்.
இதுபற்றி அறிந்த லட்சுமி துர்கா, தந்தையைகண்டித்துள்ளார்.
கோபம் அடைந்த தந்தை, மகளிடம், 'திருமணத்திற்கு பின், உனது சம்பளத்தை எனக்கு கொடுத்து விடு; உனது வருங்கால கணவரிடம் பணம் கேட்க மாட்டேன்' என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக வீட்டில் அடிக்கடி பிரச்னை நடந்து வந்ததால், லட்சுமி துர்கா வீட்டில் இருந்து வெளியேறினார்.
கல்லுாரி அருகே வாடகைக்கு வீடு எடுத்து வசித்தார். நேற்று முன்தினம் லட்சுமி துர்கா வேலை செய்யும் கல்லுாரிக்கு சென்ற நாகேந்திரா,கல்லுாரி வளாகத்தில் மகளை சந்தித்து பேசினார்.
அப்போது ஏற்பட்ட தகராறில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, மகளை சரமாரியாக குத்திய அவர் தப்பினார்.
உயிருக்கு போராடிய லட்சுமி துர்கா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குடும்பத்தினர் அளித்த புகாரில் நாகேந்திரா கைது செய்யப்பட்டார்.
