/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காதலருடன் ஓடிய மகளுக்கு தந்தை இறுதிச்சடங்கு
/
காதலருடன் ஓடிய மகளுக்கு தந்தை இறுதிச்சடங்கு
ADDED : அக் 11, 2025 11:02 PM

பெலகாவி: காதலித்த இளைஞருடன் மகள் ஓடியதால் வெறுப்படைந்த தந்தை, அவள் இறந்துவிட்டதாகக் கூறி இறுதிச் சடங்குகள் செய்து, ஊர் முழுவதும் உணவு வழங்கினார்.
பெலகாவி மாவட்டம், ராய்பாக் தாலுகாவின் நாகராளா கிராமத்தில் வசிப்பவர் சிவகவுடா பாட்டீல். இவருக்கு நான்கு மகள்கள்.
இதில் சுஷ்மிதா, 19, கடைசி மகள். இவர் இதே கிராமத்தில் வசிக்கும் விட்டல் பஸ்தவாடா, 29, என்பவரை காதலித்தார். இவர், தாசில்தார் அலுவலகத்தில் பணியாற்றுகிறார்.
காதலர்கள் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றினர்; திருமணம் செய்து கொள்ளவும் விரும்பினர். இது சுஷ்மிதாவின் பெற்றோருக்கு பிடிக்கவில்லை.
மகளை கண்டித்து புத்திமதி கூறினர். இதை பொருட்படுத்தாத மகள், தனக்கு விட்டல் பஸ்தவாடாவை திருமணம் செய்து வைக்கும்படி, பிடிவாதம் பிடித்தார்.
பெற்றோர் சம்மதிக்க மாட்டார்கள் என்பதை அறிந்து, சில நாட்களுக்கு முன்பு, காதலரை திருமணம் செய்து கொண்ட சுஷ்மிதா, ஊரை விட்டு ஓடிவிட்டார்.
மகள் மாயமானதால் சிவகவுடா பாட்டீல், ராய்பாக் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசாரின் விசாரணையில், அவர் காதலனுடன் ஓடியது தெரிந்தது.
ம களின் செயலால் மனம் நொந்துபோன சிவகவுடா பாட்டீல், 'எங்களை பொருத்தவரை மகள் இறந்துவிட்டார்' என, முடிவு செய்தார்.
மகளின் உருவப்படத்தை போட்டு, அஞ்சலி போஸ்டர் ஒட்டினார். அது மட்டுமின்றி மகளுக்கு இறுதிச்சடங்குகளையும் நடத்தினார்.
உற்றார், உறவினரை அழைத்து உணவு வழங்கினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து, சிவகவுடா பாட்டீல் கூறியதாவது:
பண்பாட்டை மறந்து, என் மகள் இப்படி செய்துவிட்டார்; என் மனதை நோகடித்தார், எங்களை பொருத்தவரை, என் மகள் செத்துவிட்டாள். எனவே அவருக்கு இறுதிச்சடங்குகள் செய்தேன்.
என் மகளுக்கு வெறும் 19 வயதுதான். எனக்கு நான்கு மகள்கள் இருந்தனர்; மகன் இல்லை.
எங்களுக்கு வயதான நிலையில், மகள் இப்படி செய்தது சரியல்ல. யார் வீட்டு பெண்ணாக இருந்தாலும், கலாசாரத்தை மறக்காதீர்கள். உங்களின் தாய், தந்தை மனதை நோகடிக்காதீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.