/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
14 வயது மகனை அடித்து கொன்ற தந்தைக்கு 'ஆயுள்'
/
14 வயது மகனை அடித்து கொன்ற தந்தைக்கு 'ஆயுள்'
ADDED : ஆக 14, 2025 11:12 PM
பெங்களூரு: தன் 14 வயது மகனை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்த தந்தைக்கு, ஆயுள் தண்டனை விதித்து பெங்களூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பெங்களூரின் குமாரசாமி லே - அவுட்டில் வசிப்பவர் ரவிகுமார், 42. இவருக்கு திருமணமாகி, இரண்டு மகன்கள் உள்ளனர். குடிப்பழக்கத்துக்கு அடிமையான ரவிகுமார், எந்த வேலைக்கும் செல்லாமல், பொழுது போக்கினார். இவரது மனைவி, ஆயத்த ஆடை நிறுவனத்தில் பணியாற்றி, குடும்பத்தை நடத்துகிறார்.
தினமும் மது வாங்க, மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவு கொடுத்து, பறித்து செல்வார். இவரது மனைவி சம்பாதித்த பணம் குடும்ப நிர்வகிப்புக்கு போதுமானதாக இல்லை. எனவே தாயின் கஷ்டத்தை பகிர்ந்து கொள்ள, இவரது இளைய மகன் தேஜஸ், 14, முடிவு செய்தார். தினமும் காலையில் நாளிதழ் போடுவது, பால் பாக்கெட் போடும் பணிக்கு சென்றார்.
தன் அண்ணனை நன்றாக படிக்க வைக்கலாம் என, தேஜஸ் விரும்பினார். இதற்காக பணிக்கு சென்றார். இதனால் அவரால் பள்ளிக்கு சரியாக செல்ல முடியவில்லை. இதையறிந்த தந்தை ரவிகுமார், மகனை திட்டி, தகராறு செய்தார்.
கடந்த 2024 நவம்பர் 15ம் தேதியன்று, இது விஷயமாக தந்தைக்கும், மகனுக்கும் வாக்குவாதம் நடந்தது. அப்போது கிரிக்கெட் மட்டையால், மகனின் மண்டை, முகம், கை, கால்களில் கண்மூடித்தனமாக தாக்கினார். தலையை சுவற்றில் மோதி கொலை செய்தார்.
குமாரசாமி லே - அவுட் போலீஸ் நிலையத்தில், தேஜசின் தாய் புகார் அளித்தார். புகாரின்படி ரவிகுமாரை கைது செய்த போலீசார், விசாரணை முடிந்து சிட்டி சிவில் மற்றும் சிறார்கள் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். விசாரணையில் ரவிகுமாரின் குற்றம் உறுதியானதால், அவருக்கு ஆயுள் தண்டனையும், 25,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி சந்தோஷ், நேற்று தீர்ப்பளித்தார்.