/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'முதியோர் இல்லமாக' மாறும் கர்நாடக தி.மு.க., லெட்டர் பேடு கட்சியாக மாறிடுமோ என அச்சம்
/
'முதியோர் இல்லமாக' மாறும் கர்நாடக தி.மு.க., லெட்டர் பேடு கட்சியாக மாறிடுமோ என அச்சம்
'முதியோர் இல்லமாக' மாறும் கர்நாடக தி.மு.க., லெட்டர் பேடு கட்சியாக மாறிடுமோ என அச்சம்
'முதியோர் இல்லமாக' மாறும் கர்நாடக தி.மு.க., லெட்டர் பேடு கட்சியாக மாறிடுமோ என அச்சம்
ADDED : நவ 15, 2025 11:07 PM
ஆரம்பத்தில் கர்நாடக தமிழர்களின் பாதுகாப்பு கவசமாக விளங்கியது தி.மு.க., இது தமிழர்களின் கட்சி என்பதை தவிர்க்க கன்னடர், தெலுங்கர், மராத்தியர் ஆகியோரையும் தி.மு.க.,வில் இணைத்தனர். சமூக சீர்திருத்த கொள்கையின் நோக்கத்தில் பலர் இணைந்தனர்.
சாம்ராஜ் நகர் எம்.பி., மத்திய, மாநில அமைச்சராக பதவி வகித்து காலமான சீனிவாச பிரசாத் கூட, ஆரம்ப காலத்தில் தி.மு.க., உறுப்பினர் தான்.
பெங்களூரு நேருபுரம் வார்டில் 1960ல் முதன் முறையாக தி.மு.க.,வில் கவுன்சிலரானவர் பாண்டியன். இவர், மாநகராட்சியின் சுகாதார நலத்துறை வாரிய தலைவராக பதவி வகித்தார். தி.மு.க.,வை சேர்ந்த லிங்கையா, குப்புசாமி உள்ளிட்டோர் பெங்களூரு மாநகராட்சி மேயராக இருந்துள்ளனர்.
பெங்களூரு பாரதிநகர் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த பூசலிங்கம் என்ற திராவிட மணி மூன்று முறை மாநகராட்சி கவுன்சிலராகவும், நிலைக் குழு தலைவராகவும் இருந்தவர்.
அவரை தொடர்ந்து 11 பேர் தி.மு.க.,வில் கவுன்சிலராக இருந்தனர். இவர்களில் உசேன் உட்பட நான்கு பேர் மாநகராட்சி குழுத் தலைவராக இருந்துள்ளனர்.
கேள்விக்குறி பெங்களூரை கடந்து இரியூர் நகராட்சி தலைவராக முனிசாமி, தங்கவயல் நகராட்சியில் கோபாலகிருஷ்ணன், இரா.தங்கராசு, இரா.நாராயணன், தட்சிணாமூர்த்தி, ஜெயசீலன், துராப் ஆகியோரும் கவுன்சிலர்களாக இருந்துள்ளனர். இதெல்லாம் 35 ஆண்டுகளுக்கு முந்தைய தி.மு.க., வரலாறு. ஆனால் தற்போதைய தி.மு.க.,வின் நிலைப்பாடு கேள்விக் குறியாகிவிட்டது.
கர்நாடகாவில் பெங்களூரு, மைசூரு, நஞ்சன்கூடு, சாம்ராஜ் நகர், தங்கவயல், பங்கார்பேட்டை, இரியூர், மங்களூரு, தாவணகெரே, ஷிவமொக்கா, பத்ராவதி ஆகிய இடங்களில் 125 தி.மு.க., கிளைகள் உள்ளன. இவற்றில் பெங்களூரில் 60, தங்கவயலில் 35 கிளைகள் உள்ளன.
சீனியர் சிட்டிசன்கள் பெரிய ஜனநாயக கட்சி என, கூறி வரும் தி.மு.க.,வில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தி புதிய நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும். ஆனால் 25 ஆண்டுகளாக தி.மு.க., நிர்வாக தேர்தலே நடத்தப்படவில்லை. இங்குள்ள தி.மு.க.,வில் 80 சதவீதம் பேர், 60 வயதை கடந்த சீனியர் சிட்டிசன் தான் உறுப்பினர்களாக உள்ளனர். 85 சதவீதம் பேர் 50 வயதைக் கடந்தவர்கள். இளைஞர்கள் 10 முதல் 15 சதவீதம் பேர் இருப்பரா என்ற சந்தேகமும் உள்ளது. எனவே, தி.மு.க., முதியோர் இல்லமாக காணப்படுகிறது.
நேற்று முன் தினம் அறிவிக்கப்பட்ட 8 பேர் கொண்ட பொறுப்புக்குழு உறுப்பினர்களில் 50 வயதில் உள்ளவர் தட்சிணாமூர்த்தி மட்டுமே. மற்றவர்கள் பயோடேட்டா அறிவித்தால் தான் வயது தெரிய வரும்.
கர்நாடகாவில் 1949ல் துவங்கிய தி.மு.க.,வில் தங்கவயலைச் சேர்ந்த ஒரே ஒருவர் மட்டுமே, மாநில துணை அமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் தங்கவயலைச் சேர்ந்தவர்களுக்கு மாநில நிர்வாகத்தில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
அதேபோல, பத்ராவதியில் சண்முகம், கோவிந்தராஜ் ஆகிய இருவர் மட்டுமே துணை அமைப்பாளராக இருந்துள்ளனர். ஆனால், 25 ஆண்டுகளாக தங்கவயல், பத்ராவதி உட்பட பிற நகரங்களை சேர்ந்தவர்களுக்கு மாநில தி.மு.க., நிர்வாகத்தில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
அங்கீகாரம் மறுப்பு பெயரளவில் மட்டுமே பிற மாவட்டங்கள், பிற நகரங்களில் தி.மு.க., கிளைகள் இருப்பதாக அடையாளம் காட்டப்படுகிறதே தவிர, கட்சிக்குள் எந்த ஒரு கவுரவமான பொறுப்பும், விருதும் வழங்கி கட்சி தலைமை அங்கீகரித்ததில்லை.
கர்நாடகாவில் கட்சி வளர்ச்சியில் உரிய கவனம் செலுத்தவில்லை. இதனால் இம்மாநிலத்தில் தி.மு.க., வேண்டுமா, வேண்டாமா என்று கட்சி தலைமை ஆர்வமின்றி இருப்பதாக மூத்த உறுப்பினர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கையில் கூட தொய்வு இருப்பதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. எனவே, இங்குள்ள தமிழ் இளைஞர்கள் பலரும் தேசிய கட்சிகளில் ஆர்வமாக செயல்படுகின்றனர்.
புதிய உறுப்பினர் சேருவது குதிரை கொம்பாக உள்ளது. இதே நிலைமை நீடித்தால், இங்கு தி.மு.க.,வும் ஒரு லெட்டர் பேடு கட்சியாகி விடும் என்பதில் சந்தேகமில்லை என, 80 வயதை தாண்டிய தி.மு.க.,வினரின் கருத்தாக உள்ளது
-- நமது நிருபர் - .

