/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தகவல்கள் தர மறுத்த அதிகாரிகளுக்கு அபராதம்
/
தகவல்கள் தர மறுத்த அதிகாரிகளுக்கு அபராதம்
ADDED : டிச 08, 2025 05:05 AM
பெங்களூரு: தகவல் உரிமை சட்டத்தின் கீழ், மனு தாக்கல் செய்தவர்களுக்கு தகவல் தெரிவிக்காத, பெங்களூரு வடக்கு மண்டல துணை அதிகாரி மற்றும் பெங்களுரு வடக்கு தாசில்தாருக்கு தகவல் உரிமை ஆணையம் அபராதம் விதித்தது.
பெங்களூரின் பெளதுார் காலனியில் வசிப்பவர் வெங்கடேஷ். இவர் ஓராண்டுக்கு முன், தொம்மசந்திரா கிராமத்தில் உள்ள தன் நிலம் சம்பந்தப்பட்ட சில ஆவணங்களை வழங்கும்படி கோரி, பெங்களூரு வடக்கு மண்டல துணை அதிகாரி கிரணிடம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், மனு தாக்கல் செய்தார்.
ஆனால் ஆவணங்களை அளிக்காமல், அவர் கால தாமதம் செய்தார். இது குறித்து கேள்வி எழுப்பி, தகவல் ஆணையத்தில், வெங்கடேஷ் மனு அளித்தார். மனு தொடர்பாக விசாரணை நடத்திய தகவல் ஆணையம், விசாரணைக்கு ஆஜராகும்படி மண்டல துணை அதிகாரி கிரணுக்கு உத்தரவிட்டது. அவர் ஆஜராகவில்லை.
அதன்பின் விசாரணைக்கு ஆஜராகாததற்கு விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பியது. அதற்கும் கிரண் பதில் அளிக்கவில்லை.
எனவே இவருக்கு 25,000 ரூபாய் அபராதம் விதித்த தகவல் ஆணையம், மனுதாரர் கேட்ட தகவல்களை தெரிவிக்கும்படி, நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
பெங்களூரு வடக்கின் மாளகாலு கிராமத்தில் வசிக்கும் சந்திரப்பா, தன் குடும்ப சொத்துகளின் சில ஆவணங்களுக்காக, பெங்களூரு வடக்கு தாசில்தார் மனுராஜிடம் மனு தாக்கல் செய்தார். அவர், ஆவணங்களை தராமல் இழுத்தடித்தார்.
இது பற்றி சந்திரப்பா, தகவல் ஆணையத்தில் மனு அளித்திருந்தார். மனுவை விசாரித்த ஆணையம், விசாரணைக்கு நேரில் ஆஐராகும்படி, தாசில்தாருக்கு உத்தரவிட்டது.
அவர் ஆஜராகாததால் அவருக்கும் 25,000 ரூபாய் அபராதம் விதித்தது. மனுதாரர் கேட்ட தகவல்களை தெரிவிக்கும்படி தாசில்தாருக்கு உத்தரவிட்டது.

