மீண்டும் 40 நிமிடங்கள் தாமதமாக தரையிறங்கிய 'பிளை 91' விமானம்
மீண்டும் 40 நிமிடங்கள் தாமதமாக தரையிறங்கிய 'பிளை 91' விமானம்
ADDED : ஏப் 26, 2026 11:47 PM
ஹூப்பள்ளி: ஏற்கனவே மோசமான வானிலை மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிளை 91 ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்குவதில் பிரச்னை ஏற்பட்டது. மூன்றாவது முறையாக, 40 நிமிடம் தாமதமாக ஹூப்பள்ளிக்கு வந்ததால் பதற்றம் ஏற்பட்டது.
கடந்த 20ம் தேதி ஹைதராபாதில் இருந்து ஹூப்பள்ளி வந்த, 'பிளை 91' ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம், மோசமான வானிலை காரணமாக, நான்கு மணி நேரம் வானத்தில் வட்டமிட்டு, கடைசியாக பெங்களூரு கெம்பே கவுடா விமான நிலையத்தில் தரையிறங்கியது.
அதன்பின், 22ம் தேதி இதே நிறுவனத்துக்கு சொந்தமான விமானம், பெங்களூரில் இருந்து ஹூப்பள்ளிக்கு சென்றது.
விமான நிலையம் அருகில் செல்லும் போது விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, தரையிறங்க முடியாமல், வானத்தில் வட்டமடித்தது. இரண்டரை மணி நேரத்துக்கு பின், விமானம் தரையிறங்கியது.
இந்நிலையில், ஹைதராபாதில் இருந்து நேற்று முன்தினம் மாலை 3:13 மணிக்கு புறப்பட்ட விமானம், மாலை 4:30 மணிக்கு ஹூப்பள்ளியில் தரையிறங்கியிருக்க வேண்டும். ஆனால், விமானம் 5:09 மணிக்கு தான் தரையிறங்கியது.
'மோசமான வானிலை காரணமாக, 40 நிமிடம் வானத்தில் பறந்ததாகவும், தொழில்நுட்ப கோளாறு எதுவும் இல்லை என்றும் விமான நிறுவன இயக்குநர் ரூபேஷ் குமார் தெரிவித்தார்.
'மற்ற நிறுவனங்களின் விமானங்கள் தரையிறங்குவதில் எந்த பிரச்னையும் இல்லாதபோது, இந்நிறுவனத்தின் விமானத்தில் மட்டும் பிரச்னை ஏற்பட காரணம் என்ன' என, பயணியர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
