/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்., சாலைகளை சுத்தம் செய்ய வரும் வெளிநாட்டு இயந்திரங்கள்
/
பெங்., சாலைகளை சுத்தம் செய்ய வரும் வெளிநாட்டு இயந்திரங்கள்
பெங்., சாலைகளை சுத்தம் செய்ய வரும் வெளிநாட்டு இயந்திரங்கள்
பெங்., சாலைகளை சுத்தம் செய்ய வரும் வெளிநாட்டு இயந்திரங்கள்
ADDED : பிப் 04, 2025 06:36 AM
பெங்களூரு: அதிக விலை மதிப்புள்ள, 20 குப்பை கூட்டும் இயந்திரங்களை வெளிநாட்டில் இருந்து, வாடகைக்கு பெற பெங்களூரு மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு 764 கோடி ரூபாய் செலவிட திட்டமிட்டுள்ளது.
பெங்களூரின் சாலைகளை துாசி இல்லாமல் பராமரிக்கும் நோக்கில், 2024 - 25ம் ஆண்டு மாநகராட்சி பட்ஜெட்டில், 'பிராண்ட் பெங்களூரு' திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ் மெக்கானிக்கல் ஸ்வீப்பிங் இயந்திரங்கள் வாங்க, 30 கோடி ரூபாய் ஒதுக்கி இருந்தது. இந்த இயந்திரங்கள் நகரின் பல்வேறு இடங்களில், சாலைகளை சுத்தம் செய்கின்றன.
இதற்கிடையே வெளிநாட்டில் இருந்து இயந்திரங்களை வாடகைக்கு பெற, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்த இயந்திரங்கள் மூலம், சாலையை பெருக்க 1 கி.மீ.,க்கு 1,000 ரூபாய் வாடகை நிர்ணயித்துள்ளது. இந்ததிட்டத்துக்காக, அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு 764 கோடி ரூபாய் செலவிடவும் தயாராகிறது. வெளிநாட்டு இயந்திரங்களை வாடகைக்கு பெற, நகர வளர்ச்சி துறையிடம் அனுமதி கோரியுள்ளது. மாநகராட்சியின் முடிவுக்கு, பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, அவர்கள் கூறியதாவது:
கடந்த 2017 - 2018ல் வாங்கிய, 26 குப்பை கூட்டும் இயந்திரங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. கூடுதல் இயந்திரங்கள் வாங்கும்படி, துப்புரவு தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதன்படி புதிய இயந்திரங்கள் வாங்கலாம். ஒரு இயந்திரத்தின் விலை, 1.8 கோடி ரூபாயாகும்.
இவைகள் இந்தியாவிலேயே தயாராகின்றன. விலையும் குறைவு. தற்போது பெங்களூரு மாநகராட்சி, வெளிநாட்டில் இருந்து வாடகைக்கு பெற முற்பட்டுள்ள இயந்திரங்களின் நிர்வகிப்பு செலவு, இந்திய இயந்திரங்களின் நிர்வகிப்பு செலவை விட, பல மடங்கு அதிகமாகும். மாநகராட்சிக்கு பொருளாதார சுமை ஏற்படும்.
நகரின் சாலைகளை சுத்தம் செய்ய, 17,000 துப்பரவு தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களின் ஆலோசனை பெறாமல், வெளிநாட்டில் இருந்து குப்பை கூட்டும் இயந்திரங்களை வாடகைக்கு பெற, மாநகராட்சி முடிவு செய்திருப்பது சரியல்ல.
அது மட்டுமின்றி, வெளிநாட்டு இயந்திரங்கள் இந்திய சாலைகளில் எப்படி செயல்படுகின்றன என்பதை, சோதித்து பார்க்காமல், வாடகைக்கு பெற வேண்டிய அவசியம் இல்லை. இது, 'மேக் இன் இந்தியா' திட்டத்துக்கு எதிரானதாகும். குப்பை சுத்தம் செய்ய, 764 கோடி ரூபாய் செலவிடுவது ஆச்சரியமளிக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
....புல் அவுட்....
மாநகராட்சியின் பொருளாதார சுமையை குறைக்கும் நோக்கில், வெளிநாட்டில் இருந்து இயந்திரங்கள் வாடகைக்கு பெறப்படும். பெங்களூரின் முக்கிய சாலைகளை, துாசி இல்லாமல் சுத்தம் செய்ய, மெக்கானிகல் ஸ்வீப்பிங் இயந்திரங்கள் அவசியம். இது தொடர்பாக, இரண்டு நிறுவனங்கள் மூலம் ஆய்வு நடத்துகிறோம்.
- துஷார் கிரிநாத், தலைமை கமிஷனர், பெங்., மாநகராட்சி
***