/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'ஆன்லைன் டிரேடிங்' மோசடியில் ரூ.46 லட்சம் சுருட்டிய நால்வர் கைது
/
'ஆன்லைன் டிரேடிங்' மோசடியில் ரூ.46 லட்சம் சுருட்டிய நால்வர் கைது
'ஆன்லைன் டிரேடிங்' மோசடியில் ரூ.46 லட்சம் சுருட்டிய நால்வர் கைது
'ஆன்லைன் டிரேடிங்' மோசடியில் ரூ.46 லட்சம் சுருட்டிய நால்வர் கைது
ADDED : நவ 25, 2025 05:59 AM
உத்தரகன்னடா: 'ஆன்லைன் டிரேடிங்'கில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசை காட்டி, தொழிலதிபரிடம் 46.50 லட்சம் ரூபாய் மோசடி செய்த நால்வர் கைது செய்யப்பட்டனர்.
உத்தரகன்னடா மாவட்டம், ஹொன்னாவரா நகரின், பிரபாத் நகரில் வசிப்பவர் கிரீஷ், 35. தொழிலதிபரான இவர் ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தார். இவ்வேளையில் முகநுாலில் டிரேடிங் விளம்பரத்தை கவனித்து, அதன் செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டார்.
சில நாட்களுக்கு பின், அவரை, 'வாட்ஸாப்' எண்ணில் தொடர்பு கொண்டு பேசிய நபர், 'நாங்கள் கூறும் ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால், குறுகிய காலத்தில், அதிக லாபம் பெறலாம்' என, ஆசை காட்டினார். இதை நம்பிய தொழிலதிபர், நடப்பாண்டு மே 28 முதல், ஜூலை 23 வரை படிப்படியாக 46.50 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார். இது 75 லட்சம் ரூபாயாக அதிகரித்ததாக, வங்கிக் கணக்கில் காட்டியது.
ஆனால், அந்த பணத்தை எடுக்க முடியவில்லை. தன்னிடம் பேசிய நபரை தொடர்பு கொள்ள முயற்சித்தும் பலன் இல்லை. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தொழிலதிபர் கிரீஷ், உத்தர கன்னடாவின் சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்தார். குற்றவாளிகளை பிடிக்க, டி.எஸ்.பி., அஸ்வினி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் விசாரணை நடத்தி, ஆலம், 35, பிரவீன்குமார், 35, வினய்குமார், 30, ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மூவரும், ஆர்.பி.எல்., வங்கியில் ரிலேஷன் ஷிப் மேனேஜர்களாக பணியாற்றுகின்றனர். இவர்கள் கொடுத்த தகவலின்படி, ஷமீம் அக்தர், 55, கைது செய்யப்பட்டார். இவர்களிடம் தீவிர விசாரணை நடக்கிறது.
போலீசார் கூறுகையில், 'சமூக வலைதளங்களில் வரும் விளம்பரங்களை, பொது மக்கள் நம்பாதீர்கள். அதிக லாபம் கிடைக்கும் என, ஆசை காட்டி மோசடி நடக்கிறது. அதிகாரப்பூர்வம் அல்லாத டிரேடிங் செயலிகளில், முதலீடு செய்யக்கூடாது. அறிமுகமில்லா நபர்கள், வாட்ஸாப், டெலிகிராம் வழியாக கூறும் தொழில் ஆலோசனைகளை நம்பி, பணத்தை பரிமாற்றம் செய்யாதீர்கள்' என்றனர்.

