/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சூடுவைத்து மூன்று வயது ஆண் குழந்தை கொலை தாயின் இரண்டாவது கணவர் உட்பட நால்வர் கைது
/
சூடுவைத்து மூன்று வயது ஆண் குழந்தை கொலை தாயின் இரண்டாவது கணவர் உட்பட நால்வர் கைது
சூடுவைத்து மூன்று வயது ஆண் குழந்தை கொலை தாயின் இரண்டாவது கணவர் உட்பட நால்வர் கைது
சூடுவைத்து மூன்று வயது ஆண் குழந்தை கொலை தாயின் இரண்டாவது கணவர் உட்பட நால்வர் கைது
ADDED : மே 24, 2025 11:07 PM

பெலகாவி: மூன்று வயது குழந்தையை கொலை செய்த, தாயின் இரண்டாவது கணவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டனர்.
பீஹாரை சேர்ந்தவர் ரங்கீலா, 27. இவருக்கு திருமணமாகி கார்த்திக் முகேஷ் மாஞ்சி என்ற மூன்று வயது ஆண் குழந்தை இருந்தது. கணவரை விட்டு விலகி, மகேஷ் மாஞ்சி, 33, என்பவரை ரங்கீலா இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
சில மாதங்களுக்கு முன்பு, பிழைப்பு தேடி, கர்நாடகாவின் பெலகாவிக்கு இவர்கள் வந்தனர்.
வரும்போது கார்த்திக்கை அவனது தந்தையிடம் விட்டுவிடும்படி, மனைவி ரங்கீலாவிடம் மகேஷ் மாஞ்சி கூறினார். ஆனால் ரங்கீலா கேட்கவில்லை.
தன்னுடன் குழந்தையை அழைத்து வந்தார். சவதத்தி தாலுகாவின் ஹாரோகொப்பா கிராமத்தில், பீஹாரிகள் தங்கியிருந்த பகுதியில் ஷெட்டில் தங்கினர். இங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் பணிக்கு சேர்ந்தனர்.
குழந்தையை அழைத்து வந்ததால், தினமும் மனைவியுடன் மகேஷ் மாஞ்சி தகராறு செய்துள்ளார். நேற்று முன் தினம் இரவும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மகேஷ் மாஞ்சியின் கூட்டாளிகள் ராகேஷ், சிவநாத், மகேஸ்வர மாஞ்சி அங்கு வந்தனர்.
அவர்களிடம் மகேஷ் மாஞ்சி, 'நான் வேண்டாம் என, சொல்லியும் மகனை அழைத்து வந்தார். ரங்கீலாவுக்கு பாடம் புகட்ட வேண்டும்' என, கூறி, மூவரும் சேர்ந்து ரங்கீலாவை தாக்க முற்பட்டனர்.
உயிருக்கு பயந்து அவர் அங்கிருந்து தப்பியோடினார். ஆனால் குழந்தை கார்த்திக் முகேஷ் மாஞ்சி, நடக்கப்போகும் விபரீதம் புரியாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தது.
குழந்தையை மகேஷ் மாஞ்சியும், அவரது கூட்டாளிகளும் சேர்ந்து, விறகு கட்டையால் அடித்து, சூடு வைத்தும் கொலை செய்துவிட்டு தப்பியோடினர்.
சிறிது நேரத்துக்கு பின் ரங்கீலா திரும்பி வந்தார். அங்கு குழந்தை இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்பகுதியினர் உதவியுடன், முருகோடா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரும் அங்கு வந்து, குழந்தையின் உடலை மீட்டனர். கொலையாளிகளை கைது செய்தனர்.
இதுகுறித்து, எஸ்.பி., பீமா சங்கர் குளேத், நேற்று அளித்த பேட்டி:
இது மிகவும் மோசமான சம்பவம். மூன்று வயது ஆண் குழந்தையை, தாயின் இரண்டாவது கணவரும், அவரது கூட்டாளிகளும் அடித்துக் கொலை செய்துள்ளனர். குழந்தையின் தாய் ரங்கீலா புகார் அளித்துள்ளார்.
கொலையாளிகள் நால்வரை கைது செய்துள்ளோம். அவர்களிடம் விசாரணை நடக்கிறது. தன் பேச்சை கேட்காமல், குழந்தையை தன்னுடன் அழைத்து வந்த கோபத்தில், இத்தகைய செயலை மகேஷ் மாஞ்சி செய்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.