/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆர்.சி.பி., கோப்பையுடன் தயாரான விநாயகர் சிலை
/
ஆர்.சி.பி., கோப்பையுடன் தயாரான விநாயகர் சிலை
ADDED : ஆக 19, 2025 07:52 AM

பெங்களூரு : இம்முறையும் விநாயகர் சதுர்த்திக்கு, விதவிதமான விநாயகர் சிலைகள் தயாராகின்றன. ஆர்.சி.பி., வெற்றிக் கோப்பையுடன் இருக்கும் விநாயகர், அனைவரையும் கவர்ந்துள்ளது.
வரும் 27ம் தேதியன்று, விநாயகர் சதுர்த்தி பண்டிகை வருகிறது. இதை கொண்டாட மக்கள் தயாராகின்றனர். குறிப்பாக இளைஞர்களுக்கு விநாயகர் சதுர்த்தி என்றால், கொண்டாட்டம் தான். வீதியோரங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து கொண்டாடுவர்.
இம்முறையும் பண்டிகை கொண்டாட தயாராகின்றனர். விநாயகர் சிலைகளை ஆர்டர் செய்கின்றனர். இதற்காக விதவிதமான வடிவங்களில், விநாயகர் சிலைகள் முழு வீச்சில் தயாராகி வருகின்றன.
பெங்களூரு ரூரல் மாவட்டம், தேவனஹள்ளி தாலுகாவின், விஜயபுராவில் ஏரி மண்ணில் இருந்து பல விதமான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இங்கு வசிக்கும் ராஜகோபால் குடும்பத்தினர், பல ஆண்டுகளாக இயற்கைக்கு பாதிப்பில்லாத சிலைகள் தயாரிக்கின்றனர். ஆர்.சி.பி., விநாயகர் மட்டுமின்றி, ஹனுமன், விஷ்ணு அவதாரம் உட்பட, பல விதமான விநாயகர் சிலைகள், மக்களை ஈர்க்கின்றன. களிமண், காகிதம், ஏரி மண் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி விநாயகர் சிலைகள் தயாரிக்கின்றனர். இயற்கையான நிறமூட்டிகளை பயன்படுத்துகின்றனர்.
கடந்த மூன்று தலைமுறைகளாக, விஜயபுராவின் ராஜகோபால் குடும்பத்தினர் விநாயகர் சிலைகள் தயாரிக்கின்றனர். இவர்கள் தயாரிக்கும் சிலைகளுக்கு மைசூரு, மாண்டியா, சிக்கபல்லாபூர், கோலார் உட்பட, பல இடங்களில் நல்ல வரவேற்பு உள்ளது.
இம்முறை ஆர்.சி.பி., கோப்பையை கையில் வைத்துள்ள வகையில் விநாயகர் சிலையை தயாரித்துள்ளனர். இது அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.