/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரில் ரூ.7 கோடி கொள்ளையடித்த கும்பல்... திருப்பதியில் பதுங்கல்? இருவரை பிடித்து போலீசார் 'கிடுக்கிப்பிடி' விசாரணை
/
பெங்களூரில் ரூ.7 கோடி கொள்ளையடித்த கும்பல்... திருப்பதியில் பதுங்கல்? இருவரை பிடித்து போலீசார் 'கிடுக்கிப்பிடி' விசாரணை
பெங்களூரில் ரூ.7 கோடி கொள்ளையடித்த கும்பல்... திருப்பதியில் பதுங்கல்? இருவரை பிடித்து போலீசார் 'கிடுக்கிப்பிடி' விசாரணை
பெங்களூரில் ரூ.7 கோடி கொள்ளையடித்த கும்பல்... திருப்பதியில் பதுங்கல்? இருவரை பிடித்து போலீசார் 'கிடுக்கிப்பிடி' விசாரணை
ADDED : நவ 21, 2025 06:15 AM

பெங்களூரு: பெங்களூரில் தனியார் நிறுவன வேனை மறித்து, 7 கோடி ரூபாய் கொள்ளையடித்த கும்பல், ஆந்திராவின் திருப்பதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்படி, போலீசார் அங்கு முகாமிட்டுள்ளனர். இந்த வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில், பெங்களூரு கல்யாண் நகரை சேர்ந்த இருவரை பிடித்து, போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்துகின்றனர். கொள்ளைக்கு பரப்பன அக்ரஹாரா சிறையில் சதி திட்டம் தீட்டப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், சிறையில் போலீசார் விசாரணை நடத்தினர். பெங்களூரு ஜே.பி., நகரில் உள்ள ஹெச்.டி.எப்.சி., வங்கியில் இருந்து, ஹெச்.பி.ஆர்., லே - அவுட்டில் உள்ள வங்கியின் கிளைக்கு, சி.எம்.எஸ்., என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான வேனில், நேற்று முன்தினம் 7.11 கோடி ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த வேனை மறித்த இன்னோவா காரில் வந்த 8 பேர் கும்பல், தங்களை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் என்று கூறி, வேனில் இருந்த பணப்பெட்டிகளை, காரில் ஏற்றி கொண்டு தப்பினர். பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தனிப்படை வேன் டிரைவர் பினோத் குமார், கன்மேன்கள் ராஜண்ணா, தம்மய்யா, நிறுவன ஊழியர் அப்தாப் ஆகியோரிடம், சித்தாபுரா போலீசார் விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில் கொள்ளை நடந்தது பற்றி டிரைவர் உட்பட 4 பேரும் தாமதமாக போலீசுக்கு தகவல் கொடுத்தது தெரிந்தது.
கொள்ளையர்களை பிடிக்க தெற்கு மண்டல டி.சி.பி., லோகேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
டெய்ரி சதுக்க மேம்பாலத்தில் இருந்து காரில் தப்பிய கொள்ளையர்கள் கோரமங்களா, மாரத்தஹள்ளி, ஒயிட்பீல்டு வழியாக ஹொஸ்கோட் நோக்கி சென்றது தெரிந்தது.
கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட காரின் வாகன பதிவெண்ணும் போலி என்று தெரியவந்தது.
எல்லை பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டது. அனைத்து போலீஸ் நிலையங்களும் தகவல் பறந்தது.
இரவு முழுதும் கொள்ளையர்களை போலீசார் தேடினர். ஆனால், அவர்கள் பெங்களூரில் இருப்பது பற்றி எந்த துப்பும் கிடைக்கவில்லை.
கார் சிக்கியது இந்நிலையில், ஹொஸ்கோட் வழியாக கொள்ளையர்கள் ஆந்திராவுக்கு தப்பி சென்றது தெரிந்தது. சித்தாபுரா போலீசாரும் ஆந்திரா விரைந்தனர். கொள்ளையர்கள் தப்பி சென்ற கார், நேற்று காலை ஆந்திராவின் சித்துார் பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் நின்றது.
அந்த காரை போலீசார் பறிமுதல் செய்தனர். காருக்குள் பணமோ, வேறு பொருட்களோ இல்லை.
சித்துாரில் இருந்து திருப்பதிக்கு கொள்ளையர்கள் தப்பி சென்று இருக்கலாம் என்ற தகவலின் அடிப்படையில், சித்தாபுரா போலீசார் திருப்பதிக்கு சென்றனர்.
கர்நாடக கும்பல் உள்ளூர் போலீசார் உதவியுடன் திருப்பதியில் உள்ள லாட்ஜ்கள், தங்கும் விடுதிகளில் சோதனை நடத்தினர்.
ஆனால் நேற்று இரவு வரை கொள்ளையர்களை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.
வேன் டிரைவர் பினோத்திடம் விசாரித்த போது, கொள்ளையர்கள் கன்னடம் பேசியதாக கூறினார்.
இதனால் கொள்ளையில் ஈடுபட்டது, கர்நாடகாவை சேர்ந்த கும்பல் என்பதை போலீசார் உறுதி செய்தனர்.
கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், பெங்களூரு கல்யாண் நகரை சேர்ந்த இருவரை பிடித்து, போலீசார் விசாரித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில் கொள்ளையடிக்க, பரப்பன அக்ரஹாரா சிறையில் சதி திட்டம் தீட்டப்பட்டு இருக்கலாம் என்ற தகவலின் அடிப்படையில், நேற்று முன்தினம் இரவு சிறைக்கு சென்ற போலீசார், சில கைதிகளிடம் விசாரித்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் நேற்று அளித்த பேட்டி:
கொள்ளை கும்பல், வேறு மாநிலத்திற்கு தப்பி சென்று இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.
அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர். கொள்ளை நடந்து, இரண்டு மணி நேரத்திற்கு பிறகே எங்களுக்கு தகவல் கிடைத்தது.
16 குழுக்கள் முன்கூட்டியே தகவல் கி டைத்து இருந்தால், கொள்ளை கும்பலை பெங்களூரிலேயே மடக்கி இருக்கலாம். சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சித்தாபுரா போலீஸ் நிலையம் 1 கி.மீ., துாரத்தில் தான் உள்ளது.
சி.எம்.எஸ்., நிறுவன ஊழியர்கள் மீதும் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. கொள்ளையர்களை பிடிக்க 16 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு குழுவுக்கும் ஒவ்வொரு பணி கொடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

