/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காங்., கோஷ்டியின் கைப்பாவை பைரதி சுரேஷ் பங்கார்பேட்டை நாராயணசாமி பாய்ச்சல்
/
காங்., கோஷ்டியின் கைப்பாவை பைரதி சுரேஷ் பங்கார்பேட்டை நாராயணசாமி பாய்ச்சல்
காங்., கோஷ்டியின் கைப்பாவை பைரதி சுரேஷ் பங்கார்பேட்டை நாராயணசாமி பாய்ச்சல்
காங்., கோஷ்டியின் கைப்பாவை பைரதி சுரேஷ் பங்கார்பேட்டை நாராயணசாமி பாய்ச்சல்
ADDED : ஜூலை 02, 2025 07:45 AM
கோலார் : “கோலார் மாவட்ட பொறுப்பு அமைச்சர் பைரதி சுரேஷ் நல்லவர் தான். ஆனால், காங்கிரஸ் கோஷ்டியில் சிக்கி, 'கைப்பாவை'யாக செயல்படுகிறார்,” என, பங்கார்பேட்டை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., எஸ்.என்.நாராயணசாமி குற்றஞ்சாட்டி உள்ளார்.
கர்நாடகாவில் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள், ஊழலில் மிதப்பதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களே அடுக்கியுள்ள குற்றச்சாட்டுகள், டில்லி தலைவர்களை ஆட்டம் காணச் செய்துள்ளன.
ஆட்சியும், கட்சியும் கந்தலாகி விடுமோ என்ற அச்சம், அவர்களின் துாக்கத்தை கெடுத்துள்ளது.
துஷ்பிரயோகம்
எனவே இங்குள்ள ஆட்சியில் 'அதிகார துஷ்பிரயோகம்' குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கவும், சரி செய்யவும் கர்நாடக மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, பெங்களூரில் முகாமிட்டுள்ளார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களிடம் தனி தனியாக பேசி வருகிறார்.
குழப்பத்துக்கு பஞ்சமே இல்லாத கோலார் மாவட்டத்திலும் இரு கோஷ்டிகள் செயல்பட்டு வருகின்றன.
கோலாரின் கொத்துார் மஞ்சுநாத், மாலுாரின் நஞ்சே கவுடா ஆகிய எம்.எல்.ஏ.,க்கள் முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார், முதல்வரின் அரசியல் செயலர் நசீர் அகமது, எம்.எல்.சி., அனில் குமார் ஆகியோருடன் சேர்ந்து, கோஷ்டி அரசியல் செய்து வருகின்றனர்.
“கோலார் மாவட்ட பொறுப்பு அமைச்சர் பைரதி சுரேஷ் நல்லவர் தான்; ஆனால் கோஷ்டி அரசியலில் சிக்கி, அவர்களுக்கு தாளம் போடுகிறார்,” என, பங்கார்பேட்டை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., எஸ்.என்.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், ''மாலுார் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., நஞ்சே கவுடா ஒன்றும் புலி இல்லை; அச்சப்பட வேண்டிய அவசியமே இல்லை.
''முதன்முறையாக 'கோமுல்' பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தேர்தலில் போட்டியிட்டு இயக்குநர் ஆகியுள்ளேன். இந்த நிர்வாகத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. இதை சரிப்படுத்த வேண்டும். இந்த ஊழலால் காங்கிரஸ் ஆட்சிக்கு அவப்பெயர் வரக்கூடாது. கோமுல் தலைவராக இருந்தவர் நஞ்சே கவுடா.
''எனவே மீண்டும் அவர் தலைவர் ஆகக் கூடாது; நான் தலைவர் ஆக வேண்டும். கோலார் மாவட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களிடம் ஒருங்கிணைப்பு இல்லை என மேலிட பொறுப்பாளரிடம் கூறி உள்ளேன்,'' என்றார்.
சேதம்
தங்கவயல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா கூறுகையில், ''யார் மீதும் குற்றம் சொல்வதற்காக, மேலிட பொறுப்பாளரை சந்திக்கவில்லை. கட்சி, தாயை போன்றது.
''எனக்கு கட்சி, என் தகுதிக்கேற்ற பதவியையும், கவுரவத்தையும் கொடுத்துள்ளது. மக்கள் பிரதிநிதிகளும் தங்களின் தகுதியை உணர்ந்து செயல்பட வேண்டும். கட்சிக்கும், ஆட்சிக்கும் சேதம் ஏற்பட கூடாது,'' என்றார்.
ரூபகலாவின் தந்தையான உணவுத் துறை அமைச்சர் முனியப்பாவின் கோஷ்டியில் இவர் உள்ளார். தந்தையின் அமைச்சர் பதவிக்கு ஆபத்து வராதபடி கவனமாக செயல்பட்டு வருகிறார்.
ஒவ்வொருவரையும் மேலிடப் பொறுப்பாளர் தனித்தனியாக சந்தித்ததால், யார் என்ன, 'போட்டு' கொடுத்தனர் என்பது தற்போதைக்கு வெளியே தெரிய வாய்ப்பில்லை.
அதனால், கோலார் மாவட்டத்தில் என்ன மாதிரியான 'ரியாக் ஷன்' இருக்கும் என்று கணிக்க முடியவில்லை.