ADDED : நவ 11, 2025 04:33 AM
கலாசிபாளையா: தன் நெருக்கமான தோழி இறந்த விரக்தியால், சிறுமி தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூரு கலாசிபாளையாவில் வசித்தவர் ஷர்மிளா, 16. இவர் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். இவரது பாட்டி, சிட்டி மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்கிறார். சில நாட்களுக்கு முன், சிறுமியின் பெற்றோர், தமிழகத்தின் அங்காள பரமேஸ்வரி கோவிலுக்கு சென்றுள்ளனர். பாட்டியும், பேத்தியும் வீட்டில் இருந்தனர்.
நேற்று முன் தினம் காலையில், பாட்டி வழக்கம் போன்று காய்கறி வியாபாரத்துக்கு சென்று விட்டார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில், தனியாக இருந்த ஷர்மிளா, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இரவில் பாட்டி வீட்டுக்கு வந்த பின்னரே, பேத்தி தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது; அலறி கூச்சலிட்டார்.
இதை கேட்டு அங்கு வந்த அக்கம், பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். கலாசிபாளையா போலீசார், சிறுமியின் உடலை மீட்டனர். ஷர்மிளாவின் தோழி, சமீபத்தில் இறந்து போனதிலிருந்து மனம் நொந்து காணப்பட்ட ஷர்மிளா தற்கொலை செய்திருக்கலாம் என, போலீசார் கருதி விசாரிக்கின்றனர்.

