தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தன்னம்பிக்கையுடன் மன வலிமை தரும்

 தன்னம்பிக்கையுடன் மன வலிமை தரும்

 தன்னம்பிக்கையுடன் மன வலிமை தரும்


ADDED : ஜூலை 07, 2026 04:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 07, 2026 04:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

பெங்களூரில் சுற்றுலா தலங்கள் மட்டுமின்றி, வரலாற்று பிரசித்தி பெற்ற புராதன கோவில்களுக்கும் பஞ்சமே இல்லை. இவற்றில் ராகிகுட்டா ஆஞ்சநேயர் கோவிலும் ஒன்றாகும்.

பெங்களூரின் ஜெயநகர் 9வது பிளாக்கில், 5 ஏக்கரில் ராகிகுட்டா ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. சிறிய மலை உச்சியில் குடிகொண்டுள்ள ஆஞ்சநேயர், தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இயற்கை எழில் மிகுந்த, அமைதியான இடத்தில் அமைந்துள்ள கோவிலில் தரிசனம் செய்ய ஏராளமானோர் வருகின்றனர்.

முனிவர்கள் சாபம் ஒரு முறை இந்த இடத்தில், முனிவர்கள் யாகம் நடத்தி கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக விண்ணில் பறந்து சென்ற ஆஞ்சநேயரின் வாலில் இருந்து காற்று வீசியதால், யாகத்தீ அணைந்தது. இதனால் கோபமடைந்த முனிவர்கள், ஆஞ்சநேயரை கல்லாக மாறும்படி சபித்தனர்.

ஆஞ்சநேயரும் அந்த சாபத்தை ஏற்றுக்கொண்டு, மலையில் கல்லாக மாறினார். இங்கு வரும் பக்தர்கள் தன்னை வணங்கினால், அவர்களின் கஷ்டங்களை தீர்த்து வைப்பதாக கோரினார். அதற்கு முனிவர்கள் ஒப்புக்கொண்டதாக, புராணங்கள் கூறுகின்றன.

அந்த காலத்தில், இந்த மலைப்பகுதியில் கேழ்வரகு அதிகம் விளைந்தது. எனவே, இதை ராகிகுட்டா என அழைக்க துவங்கினர். ராகிகுட்டாவில் ஆஞ்சநேயர் கோவில் கட்டுமான பணிகள், 1976ல் துவங்கி, 1981ல் முடிவடைந்தது.

கோவில் வளாகத்தில் ராமர், சிவன், விநாயகர் சன்னிதிகள் உள்ளன. கோவில் மூலஸ்தானத்தில் உள்ள ஆஞ்சநேயர் விக்ரகம், கருப்பு நிற கிரானைட் கல்லால் ஆனது. 12 அடி உயரம் கொண்டதாகும். ஒரு சிறிய சிலையும் உள்ளது. இது முனிவர்களால் உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

பெங்களூரின் அழகு சுவர்கள், துாண்கள் மீது அழகான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கோவிலின் முன்பாக தீர்த்த குளம் உள்ளது. இங்குள்ள மீன்களுக்கு பக்தர்கள் உணவளிக்கலாம். ராகிகுட்டா மலை, சஞ்சீவினி மலையை நினைவூட்டுகிறது. இங்கு தியான மண்டபம், நுாலகம், அருங்காட்சியகம், பரிசு பொருட்கள் அங்காடி உள்ளன. மலை மீது நின்று பார்த்தால், பெங்களூரின் அழகை ரசிக்கலாம்.

ராகிகுட்டா ஆஞ்சநேயர் கோவில் நிர்வாகம், சமூக சேவைகளிலும் ஈடுபட்டுள்ளது. இலவச மருத்துவமனை நடத்துகிறது. இங்கு தினமும் 500க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு, இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. தினமும் 1,000க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

ஆண்டுதோறும் ஸ்ரீராமநவமி, ஹனுமன் ஜெயந்தி உட்பட பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. இங்கு குடிகொண்டுள்ள ஆஞ்சநேயரை வணங்கினால், நெஞ்சில் துணிவு பிறக்கும்; பயம் விலகி தன்னம்பிக்கை ஏற்படும்; தீய சக்திகள் அகலும் என்பது ஐதீகம்.

எப்படி செல்வது?

கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 10 கி.மீ.,யிலும், மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து 8 கி.மீ., தொலைவிலும் ராகிகுட்டா ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. கோவிலில் இருந்து 2 கி.மீ., தொலைவில் மெட்ரோ ரயில் நிலையம் உள்ளது. பெங்களூரின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஜெயநகருக்கு பி.எம்.டி.சி., பஸ்கள் இயக்கப்படுகின்றன. வாடகை ஆட்டோக்கள், வாடகைக்கார்கள் வசதியும் உள்ளது. கோவிலில் உடை கட்டுப்பாடு உள்ளது. கண்ணியமான உடைகள் அணிந்து செல்ல வேண்டும்.

தரிசன நேரம்: காலை 8:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை; மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.

தொலைபேசி எண்: 080 - 2658 0500, 080 - 2659 4255

அருகில் உள்ள கோவில்கள்: பனசங்கரி கோவில், தொட்டகணபதி கோவில், தொட்ட பசவண்ணர் கோவில்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us