/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
குடும்பத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தும் கோதண்ட ராமச்சந்திரர்
/
குடும்பத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தும் கோதண்ட ராமச்சந்திரர்
குடும்பத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தும் கோதண்ட ராமச்சந்திரர்
குடும்பத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தும் கோதண்ட ராமச்சந்திரர்
ADDED : டிச 30, 2025 06:38 AM

எண்ணிலடங்கா ஹிந்துக்கள் வணங்கும் கடவுள் ஸ்ரீராமர். இவரது திருக்கல்யாண உற்சவம், மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. இதை காண்பது புண்ணியம் கிடைக்கும் என்பது ஹிந்துகளின் நம்பிக்கை. ஸ்ரீராமர், பரசுராமருக்காக தன் திருக்கல்யாண வைபவத்தை காட்டிய இடம் சிக்கமகளூரில் உள்ளது.
சிக்கமகளூரு நகரின் ஹிரேமகளூரில் கோதண்ட ராமச்சந்திர சுவாமி கோவில் அமைந்துள்ளது. சீதா மற்றும் லட்சுமணனுடன் வன வாசத்தில் இருந்த ஸ்ரீராமர், பார்கவபுரிக்கு வருகிறார். இந்த இடத்தில் பரசுராமரை காண்கிறார். அப்போது பரசுராமர், 'ராமா என்னால் உன் திருக்கல்யாண வைபவத்தை காண முடியவில்லை. ஒரு முறை அதை என்னால் தரிசிக்க முடியுமா' என்று கேட்டார்.
இதற்கு மகிழ்ச்சியோடு சம்மதித்த ஸ்ரீராமர், சீதையை தன் வலது புறம் நிற்க வைத்து திருக்கல்யாண வைபவத்தை காட்டினாராம். இந்த காரணத்தால் ஹிரேமகளூரில் குடிகொண்டுள்ள கோதண்டராமருக்கு, 'கல்யாண ராமன்' என்ற பெயரும் உள்ளது.
புராதன கோவில் பொதுவாக ராமர் கோவிலில் ராமர், லட்சுமணன், ஆஞ்சநேயர் விக்ரகங்கள் இருக்கும். ஆனால், ஹிரேமகளூரில் உள்ள கோதண்ட ராமச்சந்திர சுவாமி கோவிலில், ராமரின் வலது புறம் சீதாவும், இடது புறம் லட்சுமணனும் உள்ளனர்.
இதுபோன்ற தரிசனம் மிகவும் அபூர்வம். 1,200 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட புராதன கோவில் என, வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன. ராமரின் வலது புறம் சீதா தரிசனம் தரும், உலகின் சில கோவில்களில் இதுவும் ஒன்றாகும்.
சீதா ராமரின் திருக்கல்யாண வைபவத்தை பார்ப்பதற்காக, பரசுராமர் இந்த இடத்தில் தவம் செய்தாராம். இதை நினைவு கூறும் வகையில், சாளுக்கியர்கள் இக்கோவிலை கட்டினராம்.
இங்கு சீதா, லட்சுமணருடன் அருள் பாலிக்கும் ராமரை தரிசனம் செய்தால், குடும்பத்தில் பிரச்னைகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும். திருமண தடை விலகி நல்ல வரன் அமையும் என்பது ஐதீகம். இதனால், திருமணம் ஆகாத மகன் அல்லது மகள்களை பெற்றோர் அழைத்து வருகின்றனர்.
வைகுண்ட ஏகாதசி தினமும் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடக்கின்றன. இங்கு நடக்கும் சீதா ராமர் திருக்கல்யாண உத்சவம் மிகவும் சிறப்பானது. இதை பார்க்க வெளி மாநிலங்களில் இருந்தும், பக்தர்கள் வருகின்றனர்.
சிக்கமகளூருக்கு வருவோர், ஒரு முறையாவது ஹிரேமகளூருக்கு வந்து, கோதண்ட ராமச்ச்சந்திர சுவாமியை தரிசனம் செய்யுங்கள். இங்கு வைகுண்ட ஏகாதசி, ஸ்ரீராமநவமி, கிருஷ்ண ஜெயந்தி மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது
- நமது நிருபர் - .

