பெங்களூரு விமான நிலையத்தில் தங்கம் கடத்தியவர் சிக்கினார்
பெங்களூரு விமான நிலையத்தில் தங்கம் கடத்தியவர் சிக்கினார்
ADDED : ஜூன் 10, 2026 10:49 PM

பெங்களூரு: கேப்சூல் மாத்திரை வடிவில் வயிற்றுக்குள் விழுங்கி, 1.37 கோடி ரூபாய் மதிப்பிலான, தங்கம் கடத்திய பயணி, பெங்களூரு விமான நிலையத்தில் சிக்கினார்.
பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு, துபாயில் இருந்து நேற்று காலையில், விமானம் வந்தது.
அந்த விமானத்தில் பயண ம் செய்த பயணி ஒருவர், கேப்சூல் மாத்திரை வடிவில் வயிற்றுக்குள் விழுங்கி தங்கம் கடத்துவதாக, சுங்க துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
விமானத்தில் வந்திறங்கிய பயணியரை, அதிகாரிகள் கண்காணித்தனர். ஒரு பயணி மீது சந்தேகம் வலுத்தது.
அவரிடம் விசாரித்த போது, முன்னுக்கு பின் முரணாக பேசினார். கிடுக்கிப்பிடி விசாரணையில், கேப்சூல் மாத்திரை வடிவில் தங்கம் கடத்தியதை ஒப்பு கொண்டார். அந்த பயணி கைது செய்யப்பட்டார்.
வயிற்றில் இருந்த கேப்சூல்கள் வெளியே எடுக்கப்பட்டன. அதை பிரித்து, தங்கத்தை எடை பார்த்த போது, 899.50 கிராம் இருந்தது. அதன் மதிப்பு, 1.37 கோடி ரூபாய்.
அதிக பணம் சம்பாதிப்பதற்காக, துபாயில் இருந்து கடத்தியதை ஒப்பு கொண்டார். அவரிடம், தொடர் விசாரணை நடக்கிறது. அவரது பெயர், விபரங்கள் வெளியிடப்படவில்லை.
