/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மதத்தின் பெயரால் அரசு நிலத்தை ஆக்கிரமிக்க முடியாது: ஐகோர்ட்
/
மதத்தின் பெயரால் அரசு நிலத்தை ஆக்கிரமிக்க முடியாது: ஐகோர்ட்
மதத்தின் பெயரால் அரசு நிலத்தை ஆக்கிரமிக்க முடியாது: ஐகோர்ட்
மதத்தின் பெயரால் அரசு நிலத்தை ஆக்கிரமிக்க முடியாது: ஐகோர்ட்
ADDED : நவ 21, 2025 06:23 AM
பெங்களூரு: 'மதத்தின் பெயரால் அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு மற்றும் கடவுளின் பெயரால் ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளை அனுமதிக்க முடியாது' என கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
கோலார் மாவட்டத்தின் வேம்கல் பேரூராட்சியின் காலனுார் கிராமத்தில் உள்ள கிராம சாலையில், அரசு பள்ளி வளாகம், அரசு நிலத்தில் கட்டப்பட்ட கடைகளை காலி செய்யும்படி, கோலார் தாசில்தார் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து, கிராமத்தின் விராட் ஹிந்து சேவா அறக்கட்டளை மற்றும் ஜாமியா மசூதி குழுவினர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இம்மனு, நீதிபதி சுனில் தத் யாதவ் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் தரப்பு வக்கீல் வாதிட்டதாவது:
காலனுார் கிராமத்தில் உள்ள காலியான நிலம், பல ஆண்டுகளாக மனுதாரர்கள் அமைப்புகளால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
கிராம மக்கள் நலனுக்காக இந்த நிலத்தில் மதம், கலாசாரம், வணிக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமூகத்தின் நன்கொடைகளால் கடைகள் கட்டப்பட்டு உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது.
இதில் இருந்து கிடைக்கும் வாடகை பணம், மத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும். உள்ளூர் கிராம பஞ்சாயத்து, 2015 ல் இந்த இடத்தை, மனுதாரர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று முடிவு செய்தது. அந்த திட்டம் தற்போது கலெக்டரிடம் நிலுவையில் உள்ளது. இதற்கிடையில், கடைகளை அகற்ற தாசில்தார் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இன்று இந்த கடைகள் அகற்ற தேதி குறிப்பிட்டு உள்ளார்.
இவ்வாறு அவர் கூறி னார்.
அப்போது நீதிபதி கூறியதாவது:
மனுதாரர்கள், தாங்கள் கடைகள் கட்டி உள்ள நிலம், அரசு நிலம் என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அரசு நிலத்தில், மத அமைப்புகள் என்ன செய்கின்றன? எந்த அடிப்படையில், எந்த நோக்கத்துக்காக கடைகள் கட்டி வாடகைக்கு விட்டு, வாடகை வசூலிக்கின்றனர்.
இது கடவுளின் பெயரால் செய்யப்படும் ரியல் எஸ்டேட் தவிர வேறில்லை. இந்த வழியில், மதத்தின் பெயரால் அரசு நிலத்தையும், கடவுளின் பெயரால் ரியல் எஸ்டேட்டையும் ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது. 'ராம் - ரஹீம்' இணைந்திருப்பது சந்தேகங்களை எழுப்புகிறது.
தற்போதைய நிலவரப்படி, அந்த நிலம், அரசுக்கு சொந்தமானது. அரசு நிலத்தில் நீங்கள் உரிமை கோர முடியாது. அரசு நிலத்தில் உங்களின் கட்டடம் இருக்கும்போது, உங்களுக்கு எந்த பாதுகாப்போ அல்லது இழப்பீடோ வழங்க மு டியாது.
அரசு நிலம், தனி நபர்களால் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், இதுவரை அரசு ஏன் மவுனாக இருந்தது. இது தொடர்பாக மாநில அரசு, கோலார் கலெக்டர், தாசில்தார் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். விசாரணை இன்று ஒத்திவைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

