/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அதிக கட்டணம் வசூலித்தால் 'பர்மிட்' ரத்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அரசு எச்சரிக்கை
/
அதிக கட்டணம் வசூலித்தால் 'பர்மிட்' ரத்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அரசு எச்சரிக்கை
அதிக கட்டணம் வசூலித்தால் 'பர்மிட்' ரத்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அரசு எச்சரிக்கை
அதிக கட்டணம் வசூலித்தால் 'பர்மிட்' ரத்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அரசு எச்சரிக்கை
ADDED : ஜூன் 29, 2025 11:01 PM

பெங்களூரு: பைக் டாக்சி சேவைகளுக்கு, அரசு தடை விதித்துள்ள நிலையில், ஆட்டோ ஓட்டுநர்கள் மீட்டர் போடாமல், அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். அதிக கட்டணம் வசூலித்தால், ஆட்டோக்களின் பர்மிட் ரத்து செய்யப்படும் என, அரசு எச்சரித்துள்ளது.
பெங்களூரில் பைக் டாக்சி போக்குவரத்துக்கு, கர்நாடக அரசு தடை விதித்துள்ளது. ஆட்டோ ஓட்டுநர்களின் நெருக்கடிக்கு, அரசு பணிந்துள்ளது. பைக் ஓட்டுநர்களின் வேண்டுகோளுக்கும் செவி சாய்க்கவில்லை.
விதிமுறைகளை மீறி போக்குவரத்து சேவை வழங்கிய பைக்குகளை, போக்குவரத்து துறை பறிமுதல் செய்துள்ளது. எனவே பைக் டாக்சி சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
இது, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு, சாதகமாக அமைந்துள்ளது. மீட்டர் போடாமல் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். 2- - 3 கி.மீ., துாரத்தில் உள்ள இடங்களுக்கும், 200- முதல் 300 ரூபாய் கேட்பதாக, வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இது தொடர்பாக, தொடர்ந்து புகார் வந்தது. எனவே அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது, நடவடிக்கை எடுக்க அரசு முடிவு செய்துள்ளது. ஆட்டோ பர்மிட்டை ரத்து செய்வதாக எச்சரித்துள்ளது.
இது குறித்து, போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி பிறப்பித்த உத்தரவு:
மீட்டர் காட்டும் கட்டணத்தை மட்டுமே, ஆட்டோ ஓட்டுநர்கள் வசூலிக்க வேண்டும். இஷ்டத்துக்கு கட்டணம் வசூலித்து, பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுக்க கூடாது. அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட, அதிகமான கட்டணம் வசூலிக்கும் மொபைல் செயலி அடிப்படையிலான ஆட்டோக்கள் உட்பட, அனைத்து விதமான ஆட்டோ ஓட்டுநர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிக கட்டணம் கேட்பது, தராவிட்டால் பயணத்தை ரத்து செய்து தொல்லை தரும் ஆட்டோக்களின் பர்மிட் ரத்து செய்யப்படும்.
ஜூன் 18ம் தேதியன்று, ராபிடோ ஆட்டோ ஓட்டுநர், 1 கி.மீ., தொலைவு பயணம் செய்த வாடிக்கையாளரிடம் 100 ரூபாய் வசூலித்துள்ளார். அதேபோன்று, ஓலா ஆட்டோ ஓட்டுநர் 4 கி.மீ.,க்கு, 384 ரூபாய் கட்டணம் பெற்றுள்ளார். பொது மக்களிடம் இது போன்று கொள்ளை அடிப்பதை, ஆட்டோ ஓட்டுநர்கள் நிறுத்த வேண்டும். இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.