பூங்கா நிலத்தை பயன்படுத்தும் மசோதா எதிர்ப்புக்கு பணிந்து வாபஸ் பெற்றது அரசு
பூங்கா நிலத்தை பயன்படுத்தும் மசோதா எதிர்ப்புக்கு பணிந்து வாபஸ் பெற்றது அரசு
ADDED : செப் 04, 2026 03:44 AM
பெங்களூரு: எதிர்க்கட்சிகள், பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்புக்கு பணிந்த காங்கிரஸ் அரசு, பூங்கா நிலத்தை பயன்படுத்தும் மசோதாவை வாபஸ் பெற்றுள்ளது.
கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் நடந்தது. அப்போது தோட்டக்கலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்களில் 5 சதவீத நிலத்தை பொது நோக்கத்திற்கு பயன்படுத்த அனுமதிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் சட்டசபை, மேல்சபையில் நிறைவேற்றப்பட்டு, கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
இந்த மசோதாவில் பெங்களூரு சுரங்கபாதைக்காக லால்பாக் பூங்காவில் 1 ஏக்கர் நிலத்தை நிரந்தரமாக பயன்படுத்துவது பற்றியும் குறிப்பிடப்பட்டு இருந்ததால், எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பொதுமக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, லால்பாக் பூங்காவில் போராட்டமும் நடத்தினர். பெங்களூரு தெற்கு பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் புகார் அளித்தார். நாளை, நாளை மறுதினம் லால்பாக்கில் பெரிய அளவில் போராட்டம் நடத்த, பா.ஜ.,வும் தயாராகி வந்தது.
இந்நிலையில், எதிர்ப்புக்கு மத்தியில் பூங்கா நிலத்தை பயன்படுத்த வேண்டுமா என்பது பற்றி, முதல்வர் சிவகுமார் தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மக்கள் எதிர்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரச்னை உள்ளிட்ட முக்கிய அம்சங்களை கருத்தில் கொண்டு, பூங்கா நிலத்தை பயன்படுத்த அனுமதிக்கும் மசோதாவை திரும்ப பெற அமைச்சரவை முடிவு செய்தது.
இதுகுறித்து துணை முத ல்வர் பரமேஸ்வர் கூறுகையில், ''பூங்கா நிலத்தை பயன்படுத்தும் மசோதாவை திரும்ப பெற முடிவு செய்து உள்ளோம். ஆனாலும், மசோதாவில் சில திருத்தங்களை செய்து, அடுத்த கூட்டத்தொடரில் மீண்டும் தாக்கல் செய்வோம். மசோதாவை தாக்கல் செய்த போது, எதிர்க்கட்சிகள் அதன் மீது விவாதம் நடத்தவில்லை. பொதுமக்களிடம் தவறான கருத்துகளை பரப்புகின்றனர்,'' என்றார்.
