/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சாகுபடிக்கு தண்ணீர் திறக்க அரசு மறுப்பு அரிசி விலை அதிகரிக்கும் என அச்சம்
/
சாகுபடிக்கு தண்ணீர் திறக்க அரசு மறுப்பு அரிசி விலை அதிகரிக்கும் என அச்சம்
சாகுபடிக்கு தண்ணீர் திறக்க அரசு மறுப்பு அரிசி விலை அதிகரிக்கும் என அச்சம்
சாகுபடிக்கு தண்ணீர் திறக்க அரசு மறுப்பு அரிசி விலை அதிகரிக்கும் என அச்சம்
ADDED : நவ 18, 2025 04:47 AM
பெங்களூரு: கோடை சாகுபடிக்கு துங்கபத்ரா அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட அரசு மறுத்து விட்டதால், நெல் பயிரிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக அரிசி விலை உயரும் என, அஞ்சப்படுகிறது.
கர்நாடகாவிலேயே மிக அதிகமான நெல் பயிரிடும் பகுதிகளில், துங்கபத்ரா அணை நீர்ப்பாசன பகுதியும் ஒன்று. இந்த அணை கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களின் சாகுபடிக்கு தண்ணீர் வழங்குகிறது. இம்மூன்று மாநிலங்களில் 12.5 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் நெல் பயிரிடப்படுகிறது. ஆண்டுதோறும் 2.5 கோடி குவிண்டால் நெல் அறுவடை செய்யப்படுகிறது.
ஏற்கனவே ஒரு முறை அறுவடை முடித்துள்ள விவசாயிகள், இரண்டாவது சாகுபடிக்கு நெல் பயிரிட, தயாராகி வந்தனர். ஆனால் கோடை சாகுபடிக்கு துங்கபத்ரா அணையில் இருந்து, தண்ணீர் திறக்க முடியாது என, சிறிய நீர்ப்பாசனத்துறை அமைச்சகம் தெரிவித்துவிட்டது.
துங்கபத்ரா அணையின், 75 ஆண்டு வரலாற்றில் இப்போது தான் முதன் முறையாக, மதகுகள் சீரமைக்கப்படுகின்றன. 34 மதகுகளில் பெரும்பாலான மதகுகள் பழுதடைந்துள்ளன. இவற்றை மாற்றுவது கட்டாயம் என, மத்திய நீர் ஆணையம் அறிக்கை அளித்துள்ளது.
வரும் டிசம்பரில் இருந்து மதகுகளை மாற்றும் பணிகள் துவக்கப்படவுள்ளன. எனவே, இரண்டாவது சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடுவதில்லை என, நீர்ப்பாசன ஆலோசனை கமிட்டி முடிவு செய்துள்ளது.
கமிட்டியின் முடிவுக்கு, விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அணையில் நீர் இருப்புள்ள நிலையில், திறந்து விட மறுப்பது சரியல்ல. தண்ணீரை திறந்து விடும்படி நெருக்கடி கொடுக்கின்றனர்.
தண்ணீர் இல்லாவிட்டால், நெல் பயிரிட முடியாது. நெல் உற்பத்தி குறையும். இதன் விளைவாக அடுத்தாண்டு தான் அரிசி விளைவிக்க முடியும் என, அஞ்சப்படுகிறது. தென் மேற்கு பருவ மழையில் பயிரிட்ட நெல் அறுவடை துவங்கியுள்ளது.
அறுவடை முடிந்தவுடன், இடைத்தரகர்கள் நெல்லை கொள்முதல் செய்து, சேகரித்து வைத்துக் கொள்வர். இதன் மூலம் அரிசி பற்றாக்குறையை ஏற்படுத்தி, அதிக விலைக்கு விற்கும் வாய்ப்புள்ளது. இதன் விளைவாக அரிசி விலை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

