/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
முதல்வரை விமர்சித்து பிரசாரத்தை துவக்கிய கவர்னர் தி.மு.க., கூட்டணி கட்சிகள் உற்சாகம்
/
முதல்வரை விமர்சித்து பிரசாரத்தை துவக்கிய கவர்னர் தி.மு.க., கூட்டணி கட்சிகள் உற்சாகம்
முதல்வரை விமர்சித்து பிரசாரத்தை துவக்கிய கவர்னர் தி.மு.க., கூட்டணி கட்சிகள் உற்சாகம்
முதல்வரை விமர்சித்து பிரசாரத்தை துவக்கிய கவர்னர் தி.மு.க., கூட்டணி கட்சிகள் உற்சாகம்
ADDED : அக் 07, 2025 05:04 AM
சென்னை: முதல்வர் ஸ்டாலினை விமர்சித்து சட்டசபை தேர்தல் பிரசாரத்தை, கவர்னர் ரவி துவக்கி வைத்து விட்டதாக, தி.மு.க., கூட்டணி கட்சிகள் உற்சாகம் அடைந்துள்ளன.
கவர்னர் ரவி பொறுப்பேற்றதில் இருந்தே, தமிழக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
அடிக்கடி டில்லி செல்லும் கவர்னர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அதிகாரிகளை சந்தித்து, தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்து வருகிறார்.
மசோதாக்கள் நிலுவை தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களையும், கவர்னர் ஆண்டுக்கணக்கில் நிலுவையில் வைத்திருந்தார். உச்ச நீதிமன்றத்தில் முறையீட்டு, இதற்கான தீர்வை அரசு பெற்றுள்ளது.
இப்படி தமிழக அரசுக்கும், கவர்னருக்கும் நீடித்து வந்த மோதல், சில மாதங்களாக அடங்கி இருந்தது.தமிழகத்தில், அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.
இதையொட்டி, 'தமிழகம் போராடும்; தமிழகம் வெல்லும்' என்ற வாசகங்கள் உள்ள போஸ்டர்களை, தி.மு.க.,வினர் ஆங்காங்கே ஒட்டி வருகின்றனர். இதை விமர்சித்த கவர்னர், 'தமிழகத்திற்கு எதிராக யாரும் செயல்படவில்லை; எந்த சண்டையும் இல்லை. ஆனால், நான் பயணிக்கும் இடங்களில் தமிழகம் போராடும்; தமிழகம் வெல்லும் என எழுதி வைத்துள்ளனர். யாரும் எதிர்க்காதபோது, தமிழகம் யாருடன் போராடும்' என, கவர்னர் ரவி கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதிலடி தரும் வகையில், முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், 'கவர்னர் ரவியின் செயல்பாடுகளுக்கு எதிராக தமிழகம் போராடும்' என கூறியிருந்தார்.
இதையடுத்து, பல மாதங்களாக முடங்கி கிடந்த அறிக்கைப்போர் மீண்டும் ஆரம்பித்துள்ளது.
அதே நேரத்தில், முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கருத்து தெரிவித்து, சட்டசபை தேர்தல் பிரசாரத்தை கவர்னர் ரவி துவக்கி வைத்து விட்டதாக, தி.மு.க., கூட்டணி கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:
மத்திய பா.ஜ., அரசு தமிழகத்திற்கு எதிராக செயல்பட்டு வருவதாக கூறி, சட்டசபை தேர்தல் பிரசாரத்தை முன்னெடுக்க தி.மு.க., கூட்டணி திட்டமிட்டு இருந்தது.
அதற்கு அச்சாரமாகவே, 'தமிழகம் போராடும்; தமிழகம் வெல்லும்; தமிழகத்தை தலைகுனிய விடமாட்டோம்' என்ற பிரசாரத்தில், தி.மு.க.,வினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பிரசாரத்தை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் வகையில், கவர்னர் ரவியின் பேச்சு அமைந்துள்ளது.
கடந்த 2024 லோக்சபா தேர்தல் நேரத்திலும், தமிழக அரசிற்கு எதிராக கவர்னர் தொடர்ந்து பேசினார். 'கவர்னர் ரவி தன் பதவியில் நீடித்தால், தி.மு.க.,வின் தேர்தல் பிரசாரம் எளிதாகி விடும்' என, முதல்வர் ஸ்டாலின் கிண்டல் அடித்தார்.
40 தொகுதிகள் தேர்தலில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 40 தொகுதிகளை தி.மு.க., கூட்டணி கைப்பற்றி சாதனை படைத்தது. அதேபோன்று கவர்னர் ரவி துவக்கி வைத்துள்ள இந்த விமர்சனம், மாநிலம் தழுவிய பிரசாரமாக மாறி, சட்டசபை தேர்தலிலும் தி.மு.க.,வுக்கு வெற்றியை தரும்.
இவ்வாறு அந்த கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.