ADDED : ஆக 22, 2026 11:21 PM
பெங்களூரு: கர்நாடக சிறையில் கைதிகளுக்கு ராஜ உபசாரம் நடப்பது அவ்வப்போது வீடியோ, படங்கள் வெளியாவதால், இதை கட்டுப்படுத்த, ஏ.ஐ., தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்த அரசு முடிவு செய்துள்ளது.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், நடிகர் தர்ஷன், முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணா, பயங்கரவாதிகள் உட்பட பலர் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இவர்கள், ஆடம்பர வாழ்க்கை வாழ்வதாக, வீடியோக்கள், படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துகின்றன. சமீபத்தில் பிரஜ்வல் ரேவண்ணா, மொபைல் போனில் பேசும் வீடியோ வெளியானதை அடுத்து, இப்பிரச்னை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது தொடர்பாக, மூன்று சிறை போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், மாநிலத்தில் உள்ள சிறைச்சாலைகளில், ஏ.ஐ., தொழில்நுட்பம் கொண்ட கண்காணிப்பு கேமரா உட்பட சிறையை நவீன தொழில்நுட்பங்கள் மூலம் கண்காணிக்க ஒப்புதல் அளித்தது.
சிறையில் பாதுகாப்பு, கண்காணிப்பு, செயல் திறனை அதிகரிக்கும் வகையில், ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கேமராக்கள் நிறுவ முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த கேமராக்கள் சிறைக்குள் நடக்கும் செயல்பாடுகளை உயர் அதிகாரிகள் நேரடியாக கண்காணிக்க உதவும்.
வழக்கமான கண்காணிப்பு கேமராக்கள் போன்றில்லாமல், சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்களை கண்டறிவது உட்பட பல வழிகளில், ஏ.ஐ., அடிப்படையில் செயல்படும் அமைப்புகள், பாதுகாப்பு பணியாளர் களுக்கு உதவும்.
இந்த தொழில்நுட்பம், சிறைக்குள் நடக்கும் சட்ட விரோத நடவடிக்கைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவும்.
கைதிகள் சட்ட விரோதமாக மொபைல் போன்கள் பயன்படுத்துவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதை தொடர்ந்து, கையடக்க 'சிக்னல் ஜாமர்'களை நிறுவ அரசு முடிவு செய்துள்ளது. இதனால் சிறையில் இருந்தபடி மொபைல் போனில் வெளியே தொடர்பு கொள்வதை கட்டுப்படுத்த முடியும்.
கைதிகளுக்கென அதிகாரபூர்வ தொலைபேசி அழைப்பு முறையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் அவர்கள், தங்கள் குடும்பத்தினரையும், முக்கியமான நபர்களையும் சட்டப்படி தொடர்பு கொள்ள உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
