/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆறு மாதமாக கிரஹலட்சுமி பணம் வரவில்லை! பொய் கூறிய பெண் மீது சிவகுமார் கோபம்
/
ஆறு மாதமாக கிரஹலட்சுமி பணம் வரவில்லை! பொய் கூறிய பெண் மீது சிவகுமார் கோபம்
ஆறு மாதமாக கிரஹலட்சுமி பணம் வரவில்லை! பொய் கூறிய பெண் மீது சிவகுமார் கோபம்
ஆறு மாதமாக கிரஹலட்சுமி பணம் வரவில்லை! பொய் கூறிய பெண் மீது சிவகுமார் கோபம்
ADDED : அக் 18, 2025 11:13 PM

கே.ஆர்.புரம்: ''ஆறு மாதங்களாக 'கிரஹலட்சுமி' பணம் வரவில்லை,'' என பொய் சொன்ன பெண் மீது, துணை முதல்வர் சிவகுமார் கடும் கோபம் அடைந்தார்.
பெங்களூரு நடைப்பயிற்சி என்ற பெயரில், பொதுமக்களை சந்தித்து துணை முதல்வர் சிவகுமார் பிரச்னைகளை கேட்டறிந்து வருகிறார்.
கே.ஆர்.புரம் தொகுதிக்கு உட்பட்ட டி.சி.பாளையா வெங்கையா ஈகோ பார்க்கில் நேற்று அவர் பொது மக்களை சந்தித்தார்.
பார்க்கில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் அமர்ந்து, மக்களிடம் குறைகேட்டார். மைக் வாங்கி பேசிய சிலர், பட்டா வழங்க அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக புகார் செய்தனர். அதிகாரிகளின் பெயர்களை அவர் கேட்டறிந்தார்; மக்கள் அளித்த புகார் மனுக்களையும் பெற்றார்.
தலை சுற்றுகிறது புஷ்பலதா என்ற பெண் மைக்கில் பேசும்போது, ''எனக்கு ஆறு மாதங்களாக 'கிரஹ லட்சுமி' திட்டத்தின் 2,000 ரூபாய் வரவில்லை,'' என்றார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிவகுமார், ''நீங்கள் சொல்வதை கேட்கும்போது, எனக்கு தலை சுற்றுகிறது; உங்கள் மொபைல் போனை கொடுங்கள், நான் பார்க்கிறேன்,'' என்றார்.
மொபைல் போனை பார்த்தபடியே, தன் மொபைல் போனில் இருந்து பெண்கள் நலத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசினார்.
''ஆறு மாதங்களாக ஒரு பெண் கிரஹ லட்சுமி பணம் வரவில்லை என்கிறார். நீங்கள் என்ன செய்கிறீர்கள்?'' என்று கேட்டார்.
அந்த அதிகாரி பதில் அளிக்கையில், ஆகஸ்ட் வரை பெண்கள் கணக்கில் 2,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டதாக கூறினார். பெண்ணின் மொபைல் போனை பார்த்தபோது, அதிகாரி கூறியது உண்மை என்று தெரிந்தது.
இதனால் பெண் மீது சிவகுமார் கோபம் அடைந்தார். ''தேவையின்றி பொய் சொல்லாதீர்கள்,'' என்று எச்சரித்தார். ''உங்களால், பெண்கள் நல அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் என்னிடம் திட்டு வாங்கி இருப்பார்,'' என்றும் கூறினார்.
ரூ.1,600 கோடி பின், சிவகுமார் அளித்த பேட்டி:
பெங்களூரில் இருந்து 6,000 கோடி ரூபாய் வரி வசூலாகிறது. இதில் கிழக்கு மாநகராட்சியின் பங்களிப்பு 1,600 கோடி ரூபாய்.
இது பணக்கார மாநகராட்சியாக உள்ளது. இங்கு ஐ.டி., நிறுவனங்கள் அதிகம் உள்ளன. ஐ.டி., நிறுவனத்தினர் சில குறைகளை கூறி உள்ளனர். வரும் நாட்களில் அவர்களுடன், நானும், தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிரியங்க் கார்கேயும் ஆலோசனை நடத்த உள்ளோம்.
கே.ஆர்.புரத்தில் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. நீதிமன்ற வழிகாட்டுதல்படி சட்டவிரோத கட்டடங்கள் இடிக்கப்படும். சாலையோர வியாபாரிகளுக்கு விரைவில் தள்ளுவண்டி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

