/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெலகாவி கலெக்டருக்கு பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை
/
பெலகாவி கலெக்டருக்கு பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை
ADDED : ஜூலை 26, 2025 11:00 PM
பெங்களூரு: 'சர்க்கரை தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், ஆற்றில் கலப்பதை தடுப்பது பற்றி, அறிக்கை சமர்ப்பிக்காத பெலகாவி கலெக்டருக்கு 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என, தேசிய பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மஹாராஷ்டிராவின் கோலாப்பூர் நாக்னுார் கிராமத்தை சேர்ந்தவர் சாகு சிவாஜி. இவர், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல பெஞ்சில் தாக்கல் செய்த மனுவில், 'கர்நாடகாவின் பெலகாவி ஹுக்கேரி தாலுகா சங்கேஸ்வரில் உள்ள, கூட்டுறவு சர்க்கரை தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும், கழிவுகள் ஹிரண்யகேஷி ஆற்றில் கலக்கிறது. இதன்மூலம் ஆற்றின் தண்ணீரும், நிலத்தடி நீரும் மாசடைகிறது. இதை தடுக்க பெலகாவி கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும்' என்று கூறி இருந்தார்.
இந்த மனுவை நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப கமிட்டி உறுப்பினர் சத்யகோபால் கொல்லரபட்டி விசாரித்து வருகின்றனர். கழிவுகள் ஆற்றில் கலப்பதை தடுப்பது பற்றி, பெலகாவி கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தனர்.
கடந்த மாதம் 26ம் தேதி நடந்த விசாரணையின்போது, கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்யாதது, நீதிபதி கவனத்திற்கு வந்தது. இதனால் கலெக்டருக்கு 25,000 ரூபாய் அபராதம் விதித்து, விசாரணை இம்மாதம் 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அன்றைய தினம் நடந்த விசாரணையின் போதும், கலெக்டர் தரப்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. மனு மீது விசாரணை அடுத்த மாதம் 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
'அறிக்கை சமர்ப்பிக்க பெலகாவி கலெக்டருக்கு நாங்கள் தரும் கடைசி வாய்ப்பு இது. இதை அவர் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் 50,000 ரூபாய் அபராதம் செலுத்த நேரிடும்' என, தேசிய பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது.